'இது பெட்ரோல் இல்ல; தண்ணீர்தான்'- குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டரைப் பதறவைத்த பெண்கள் | People complaint to Collector about water pollution

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (08/05/2018)

கடைசி தொடர்பு:10:50 (08/05/2018)

'இது பெட்ரோல் இல்ல; தண்ணீர்தான்'- குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டரைப் பதறவைத்த பெண்கள்

மாசு

சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’என பாதிக்கப்பட்டவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மாசு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் சிப்காட் வளாகம் இயங்கிவருகிறது. அங்கு செயல்படும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசுக்களால், சிப்காட்டைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துவருவதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனுக்களையும், கையில் சாயக்கழிவு மற்றும் தோல் கழிவால் மாசுபட்ட தண்ணீரையும் பாட்டிலில் எடுத்துவந்து ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்தனர். பாட்டில் ஒவ்வொன்றிலும், புகார் கொடுக்க வந்தவர்களின் பெயர் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸார், பொதுமக்கள் கையில் கொண்டுவந்திருந்த பாட்டிலைப் பார்த்து பதறிப்போயினர். ஒருவேளை அது பெட்ரோலாக இருக்குமோ? என்பதுதான் அவர்களது பதற்றத்திற்குக் காரணமாக இருந்தது. ‘சார்...இது பெட்ரோல் இல்லை. மாசுபட்ட தண்ணீர்’ என்று பொதுமக்கள் சொன்ன பிறகுதான் போலீஸாருக்கு பி.பி குறைந்தது.

மாசு

இந்தப் பிரச்னைகுறித்து புகார் அளித்த ஜெகதீஸ்வரன் கூறுகையில், “பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 200-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள், 14 தோல் பதனிடும் தொழிற்சாலைகள், இரும்பு ஆலைகள், டயர் தொழிற்சாலைகள் போன்றவை இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் பலதரப்பட்ட கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்தக் கழிவுகளை முறையாக சுத்தப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் அப்புறப்படுத்த தொலைநோக்குடன்கூடிய திட்டம் எதுவும் சிப்காட் நிர்வாகத்திடம் இல்லை. சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் அனைத்துமே, வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், ஆழ்துளைக் கிணறுகளில் விடுவது, மழைநீரோடு கலக்கச்செய்து வெளியேற்றுவது எனப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சுற்றியுள்ள சூழல் முற்றிலுமாக கெட்டுப்போயுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “சிப்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான குடிநீர் இல்லை. நீரின் உப்புத்தன்மை குடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அதேபோல, காற்றின் மாசு அளவும் அதிகமாகியுள்ளது. இப்படி நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசுபட்டு மக்கள், கால்நடைகள், பறவைகள் என அனைத்து உயிர்வாழும் இனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. விதிமீறல் செய்யும் ஆலை உரிமையாளர்கள், பணபலத்தால் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிவருகின்றனர். இனியாவது, சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் வருமானமே முக்கியம் எனக் கருதாமல், மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் அரசு சிந்திக்க வேண்டும்” என்றார்.