Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"எங்கே இருக்கிறது அந்த டைரி?!" குட்கா ஊழல் வி.ஐ.பி-களும்.. ஆதார அழிப்பும்..! ரிப்போர்ட் - 1

 

                   குட்கா பான் மசாலா வகைகள்

குட்கா... விவரிக்க முடியாத பல குற்ற வழக்குகளுக்கும், குற்றவாளிகளுக்கும் இணையாக இன்று பேசப்படுகிற பொருளாக இந்தப் பெயர் இருக்கிறது. ஜரீதா, பீடா, கிஸ்ஸான் புகையிலை, பாங்கு, பான், பான்மசாலா, மாவா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் உயிர்க் கொல்லி அதன் பயன்பாட்டுத் தன்மையாக இருக்கிறது. வாய்ப்புற்று, தொண்டைப் புற்று நோய்களில் பாதிக்கப்படுவோரின் உணவுப் பழக்க வழக்கங்களில் குட்காவுக்கே  இன்று முதலிடம் கிடைத்திருக்கிறது. 'மது, வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு' என்று, லேபிளில் சொல்லி விட்டு, அரசாங்கமே மது விற்பதைப் போல, இதுவரையில் குட்கா வகைகளை விற்பனை செய்யவில்லை என்பது மட்டுமே ஆறுதல் தருகிறது. தமிழகத்து தாத்தாக்களில் சிலரும், பாட்டிகளில் சிலரும் கௌரி, லட்சுமி டிரேட் மார்க் கட்டை சுருட்டுகளை விடிய, விடிய புகைத்தும் தொண்ணூறு வயது வரை இருமல் இல்லாமல் வாழ்ந்து செத்ததை தமிழகம் மறக்கவில்லை... அந்தப் புகையிலைகளில் இப்போது எதை ஒளித்து வைத்தார்களோ, எதைக் கலந்தார்களோ தெரியவில்லை, தின்றவன் எவனும் நாற்பது வயதைத் தாண்டவில்லை.


                          குட்கா விவகாரத்தில் நீதி கோரும் ஸ்டாலின்

எண்பதுகளின் துவக்கத்தில், போதையூட்டக் கூடிய இந்த குட்கா- பான் வகைகளை  வட இந்திய மக்களின் கல்யாண வீடுகளில் மட்டும் பார்க்க முடிந்தது..."ஹ... ப்பங்கி அடிச்சேண்டி பான் ப்ப்பீடா போட்டேண்டி... ஹ... சிங்கிள் டப்புள் ஆச்சு சிவப்பெல்லாம் வெளுப்பாச்சு... டக்கர்  அடிக்குதடீடீடீ   டாப்புல போகுதடி ! நிக்கிறனா பறக்குறனா எதுவுமே புரியல்ல்லடி... வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி, சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி" என்று பில்லா படத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலும் அதே 1980-ம் ஆண்டில்தான் வெளிவந்தது.  இப்படி, குட்காவை  38 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பளம் விரித்து வரவேற்ற தமிழகம் தான், அதே கம்பளத்தில் இன்று கேன்சரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களை, சுருட்டியும் வைத்திருக்கிறது. கேன்சர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில், இந்தியாவுக்கு 'சிறப்புமிகு' இடம் கிடைத்ததும், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கே அதில் முதலிடம் என்பதும் இரண்டு விஷயத்தை உரத்துச் சொன்னது. ஒன்று, 'குட்கா விற்பனை என்பது சத்து மாவு விற்பனை போன்று பயனுள்ளதாக தமிழகத்தில் காட்டப்பட்டிருக்கிறது'.  இரண்டு, 'குட்கா   மூலம் கிடைக்கும் வருவாயை எந்தக் காரணத்தை முன்னிட்டும் சம்பந்தப்பட்டவர்கள் இழக்கத் தயாராக இல்லை' என்பதையும் அது சொன்னது. எதிர்கால இந்தியா, குட்கா போதையால் செத்துக் கொண்டிருப்பதைத்  தொடர்ச்சியாக ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் சுட்டிக் காட்டியதின் பலனாக,  குட்கா  விற்பனைக்கு  மத்திய அரசு,  2011-ம் ஆண்டு தடை விதித்தது. அடுத்து,  குட்கா உற்பத்தி மீது, உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது. குட்காவை மத்திய அரசு தடைசெய்த  மூன்றாவது வருடம், (மே  2013)  தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தமிழ்நாட்டில் குட்காவுக்குத் தடை விதித்து சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

ஜெயலலிதா அறிவிப்பு செய்த மூன்றாவது ஆண்டில், வரி ஏய்ப்புத் தொடர்பாக (ஜூலை, 7, 2016) வருமான வரித் துறையினர், தமிழகத்தில் நடத்திய ரெய்டில் டன் கணக்கில் குட்கா மூட்டைகள், ரூ.64  லட்ச ரூபாய் ரொக்கம், வரி ஏய்ப்புக் குறித்த பலகோடி ரூபாய் மதிப்பு ஆவணங்கள் கிடைத்தன. மந்திரி, போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர், ஐ.ஜி. என்று ஆரம்பித்து துறை வாரியாக குட்காவில் 'வாரிய' தங்க மனிதர்களைக் காட்டிக் கொடுக்கும் குறிப்புகளும் அங்கிருந்த ஒரு டைரியில் கிடைத்தது. கிடைத்த வேகத்தில், டைரியின் ஒவ்வொரு பக்கத்து விவரங்களும் காற்றில் பறக்கத் தொடங்கியது. அ.தி.மு.க.வின் இரும்புத்தலைமை என்று கருதப்பட்ட ஜெயலலிதா 2013-ல் பிறப்பித்த உத்தரவை மீறி,  குட்கா உற்பத்திக் கிடங்குகள் தமிழகத்தில் நடந்து வந்தது, இந்த ரெய்டின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

குட்கா

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போன்றவைகளோடு, உடல் நலனும் போட்டி போட்டதால், குட்கா கிடங்கு விவகாரத்தில் ஜெயலலிதா, வேகம் காட்டவில்லை. பின்னர், அப்போலோவில், அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்ததும், ஜெயலலிதாவின் இடத்துக்கு அடுத்தடுத்து இரண்டு முதலமைச்சர்கள் வந்ததும், குட்கா மீதான வேகத்தைக் குறைத்தது. பின்னர் முன்னை விட வேகம் பிடித்த குட்கா விவகாரம், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனிலும் (ஜனவரி 11, 2018)  ரெய்டு போக வைத்தது. அப்போது அதற்குச் சொல்லப்பட்ட காரணங்களும் வேறு! இவ்வளவு நாள்கள் தமிழகத்துக்குள் குட்கா வந்த விதம், வளர்ந்த விதம், மாமூல் சென்ற வழி, மாமூல் மனிதர்கள் பேசிய மொழி, மாண்புமிகுக்கள் தூக்கிப் போட்ட பழி என்று அந்த டைரியில் பல தரவுகள் ஒட்டிக் கொண்டிருந்தது... தி.மு.க.வின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், "குட்கா தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்படும் வேலைகள் நடக்கிறது" என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். ஸ்டாலின் அப்படிக் குறிப்பிடும் ஆதாரங்களில் ஒன்றாக அந்த 'டைரி'யும் இருக்கலாம், இப்போது அந்த டைரி எங்கு இருக்கிறது ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement