வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (08/05/2018)

கடைசி தொடர்பு:11:40 (08/05/2018)

தொடரும் சர்ச்சை... கோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றமா?

கோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்கா

கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களை சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 7 தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இந்த குட்கா ஆலைக்கு, தி.மு.க-வின் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உதவியதாக, கோவை எஸ்,பி மூர்த்தி தெரிவித்தார். இது தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த வாரம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலையில், கடந்த வாரம் போலீஸார் மீண்டும் நுழைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை, நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பார்சல் செய்யும் பணிகள் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் மேற்பார்வையளராக, எஸ்.பி. மூர்த்தியிடம் இருந்தப் பொறுப்பை மாற்றி, கூடுதல் எஸ்.பி அனிதாவுக்கு அந்தப் பொறுப்பினை வழங்கி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அப்டேட்களை தினமும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, “மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணை குழுக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் எஸ்.பி-யின் தினசரி பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, அதற்கென ஒரு தனி அதிகாரி ஒதுக்கப்பட்டுள்ளார். அதிகாரி எல்லாம் மாற்றம் செய்யப்படவில்லை” என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.