வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (08/05/2018)

கடைசி தொடர்பு:11:45 (08/05/2018)

'திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த் தேசியத்துக்கு வாருங்கள்'- வைகோவுக்கு, பெ.மணியரசன் அழைப்பு

தமிழர் வாழ்வுரிமைப் போராட்டங்களில் உண்மையாகப் போராடக்கூடிய வைகோ, திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த்தேசியத்துக்குள் வர வேண்டும்” என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

பெ.மணியரசன்

சமீப காலமாக திராவிட இயக்கங்களுக்கும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக சீமான், வைகோவை கடுமையாகத் தாக்கிப் பேசினார். பதிலுக்கு வைகோவும் சீமானை திட்டித் தீர்த்தார். ஆனால், தமிழ்த்தேசியத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனுக்கும் வைகோவுக்கும் இடையே எப்பொழுதும் நல்லுறவு நீடித்து வருகிறது.

இந்நிலையில், ம.தி.மு.க வெள்ளி விழா மாநாடு குறித்துப் பேசிய வைகோ, ‘’திராவிட இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய, தமிழ் தேசிய குழுக்கள் புறப்பட்டுள்ளன” என தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெ.மணியரசன், ‘’ம.தி.மு.க-வின் வெள்ளி விழா ஆண்டில்  வைகோவுக்கும் ம.தி.மு.க-வினருக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட கருத்தியலையும் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கும் எதிரான கருத்தியலையும் தமிழ்த்தேசிய பேரியக்கம் முன் வைத்து வருகிறது. அதேசமயம் ம.தி.மு.க-வுடன் தமிழர் உரிமை போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறோம். இந்த உரிமையில் சொல்கிறேன். திராவிட கருத்தியலை கைவிட்டு தமிழ்த்தேசியத்துக்கு வாருங்கள். தமிழ்த்தேசியத்தோடு முரண்படுவதும், திராவிடத்துக்குள் தமிழ்த்தேசியத்தை உட்படுத்துவதும் தவறானது.

இது தமிழர் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் பாதிப்புகளை உண்டாக்கும். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், சித்தர்கள் இலக்கியம் எதிலுமே திராவிடம், திராவிடர் என்ற சொல் இல்லை. சென்னை மாகாணத்தில் தென்னக மாநிலங்களின் பல பகுதிகள் சேர்ந்து இருந்ததால்தான் திராவிடர் கழகம் என பெரியார் பெயர் வைத்ததாக வைகோ சொல்கிறார். அப்படியென்றால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா தனியாகப் பிரிந்து சென்றுவிட்ட பிறகும் கூட ஏன் திராவிடத்தை தமிழ்நாட்டில் தூக்கி சுமக்கிறீர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடத்தை உச்சரிக்கும் அவலம் நிலவுகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் திராவிடம் இல்லை. அவர்கள் எப்பொழுதுமே இதை ஏற்றுக்கொண்டதில்லை. தமிழர்களின் இயல்பான அடையாளத்தை அழிக்கவே திராவிடர் என்ற பெயர் சூட்டப்பட்டது. வைகோ இந்த உண்மையைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசிய களத்துக்குள் வர வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.