கருத்து கேட்புக் கூட்டத்தில் அதிர்ந்த துப்பாக்கி சத்தம்! இருதரப்பினர் மோதலால் புதுச்சேரியில் பதற்றம்

புதுச்சேரியில் கலவரம்- போலீஸ் துப்பாக்கி சூடு

புதுச்சேரியில் கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க வந்த இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, தடியடி நடத்தி கலவரக்காரர்களை விரட்டினர். இதனால் அந்தப் பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.

புதுச்சேரி காலாப்பட்டில் ’ஷாசன் கெமிக்கல்ஸ்’ என்ற தனியார் மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையால் சுற்றுச் சூழல், குடிநீர் போன்றவைகள் மாசுபடுவதோடு, நிலத்தடி நீரும் கணக்கில்லாமல் உறிஞ்சப்படுகிறது என்ற குற்றச்சாட்டோடு இந்தத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்தத் தொழிற்சாலை தனது உற்பத்தியை அதிகரிக்கவும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவும் புதுச்சேரி அரசிடம் அனுமதி கேட்டது.

அதையடுத்து, இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், "ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகதான் உற்பத்தியை செய்து வருகிறது. அதற்காக ஒரு நாளைக்கு சுமார் 10,000 லிட்டர் வரை நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்காமல் கடலில் கலக்கிறார்கள். அதனால் தொழிற்சாலை விரிவாக்கக் கோரிக்கையை நிராகரிப்பதோடு, தொழிற்சாலையையும் உடனே மூட வேண்டும்” என்று அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை புதுச்சேரி ஆட்சியர் சத்யேந்திரசிங் துர்சாவத் தலைமையில் தனியார் திருமண நிலையத்தில் கருத்து கேட்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது ஆட்சியர் மேடையில் அமர்ந்ததும் தண்ணீர் குடித்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், "மினரல் வாட்டரைக் குடிக்காதீங்க. நாங்க குடிக்கற இந்தத் தண்ணீரைக் குடிங்க" என்று சொல்லி அப்பகுதியில் வரும் அழுக்கான குடிதண்ணீரைக் கொடுக்கச் சென்றார். அதையடுத்து அங்கே சலசலப்பு அதிகமானதால் ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினர். ஆனால், திருமணம் நிலையத்தின் வாசலிலேயே சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, "கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டாம். தொழிற்சாலையை மூடுங்கள்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ஜோசப் தலைமையில் சுமார் 200 பேர் தனியார் தொழிற்சாலைக்கு ஆதரவாக பேரணியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் போலீஸார் வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் எதிர்பாராத விதமாக அங்கு கலவரம் ஏற்பட்டது. இப்படி நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்த போலீஸ் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தத் தடியடியில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். போலீஸின் தடியடித் தாக்குதலைக் கண்டித்து கிராம மக்களும், அப்பகுதி மீனவ மக்களும் கிழக்குக் கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் சுமார் ஒரு மணி நேரம் சென்னை-புதுச்சேரி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தக் கலவரம் காரணமாக காலாப்பட்டு முதல் பிள்ளைச்சாவடி வரை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!