வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (08/05/2018)

கடைசி தொடர்பு:13:22 (08/05/2018)

'கதவைத் திற ஆர்.ஆர்...நான்தான் வந்திருக்கேன்! ' - ராக்கெட் ராஜா சுற்றிவளைக்கப்பட்ட பின்னணி

 ராக்கெட் ராஜா


சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, அவரது கூட்டாளிகளை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். அப்போது, ராக்கெட் ராஜாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட உதவி கமிஷனர் ஒருவரின் பெயரைச் சொல்லித்தான், தனிப்படை போலீஸார் கதவைத் திறக்கவைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நெல்லைப் பேராசிரியர் செந்தில்குமார், கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவைப் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், ஒன்பதாவது மாடியில் ராக்கெட் ராஜா தங்கியிருக்கும் தகவல், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீஸாருக்குக் கிடைத்தது. அதன்பேரில், அதிகாலையில் அதிரடியாக ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸார், ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்தனர். தொடர்ந்து, ராக்கெட் ராஜாவிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் வைத்திருந்ததன் அடிப்படையில், அவர்மீது வழக்குப்பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். நெல்லை கொலை வழக்கிலும் கைதுசெய்ய, சட்டரீதியான நடவடிக்கைகளை அம்மாவட்ட போலீஸார் செய்துவருகின்றனர். அவரைக் காவலில் எடுக்கவும் போலீஸார் முடிவுசெய்துள்ளனர். 

ராக்கெட் ராஜா கைதானவுடன், போலீஸ் உயரதிகாரிகளுக்கு மூன்று வி.வி.ஐ.பி-க்களிடமிருந்து போன் அழைப்புகள் வந்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரிகள், ' ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறை, வி.வி.ஐ.பி ஒருவரின் உதவியாளர் பெயரில் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்தால், இந்த ஹோட்டலில்தான்  ராஜா தங்குவது வழக்கம். அதன்படி, அங்கு தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை சந்திக்க அவருக்கு வேண்டப்பட்டவர்கள் வருவதுண்டு. அதில், போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரும் அடக்கம். நேற்று அதிகாலை, ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறைக்குச் சென்ற போலீஸார், உதவி கமிஷனரின் பெயரைக் குறிப்பிட்டு, 'நான்தான் வந்திருக்கிறேன்... கதவைத் திற ஆர்.ஆர்...' என்று கூறியுள்ளனர். (ஆர்.ஆர் என்பது ராக்கெட் ராஜாவின் செல்லப் பெயர்)

இதையடுத்து, தைரியமாகக் கதவைத் திறந்தார் ராக்கெட் ராஜா. அப்போது, துப்பாக்கியோடு காத்திருந்த போலீஸைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே திகைத்துப்போய் நின்றார். அந்த இடத்தில் அவரைக் கைதுசெய்தோம். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டவுடன், மூன்று விவிஐபி-க்களிடமிருந்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு போன் அழைப்புகள் வந்தன. அவர்களில் ஒருவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர். இன்னொருவர், ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர். மற்றொருவர் சினிமா பிரமுகர். இதையடுத்து, ராக்கெட் ராஜா மீதான பிடியை நாங்கள் தளர்த்தவேண்டிய சூழல் ஏற்பட்டது' என்றார். 

இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ' சட்டப்படி எங்களது கடமையைச் செய்துள்ளோம். ராக்கெட் ராஜா கைது சம்பவத்தில் யாருடைய தலையீடும் இல்லை' என்றார். இதைத் தொடர்ந்து, ராக்கெட் ராஜாவுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ' அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், ராக்கெட் வடிவத்திலான கேக்கை ஆர்.ஆர் வெட்ட, அவருக்கு வேண்டப்பட்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில், சில காவல்துறை அதிகாரிகளும் அடக்கம்' என்றனர்.