`தனியார் காற்றாலையை அனுமதிக்கக் கூடாது' - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட்கள்

தூத்துக்குடியில் அரசின் உரிய அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டு வரும் தனியார் காற்றாலைக்கு தடை விதிக்கவும், இதனை எதிர்த்த கிராம மக்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் அரசின் உரிய அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டு வரும் தனியார் காற்றாலைக்குத் தடை விதிக்கவும், இதை எதிர்த்த கிராம மக்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

marksist communist protet in thoothukudi

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு சிலுக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துசாமிபுரம், மடத்துப்பட்டி ஆகிய கிராமத்தில் அரசின் அனுமதி இல்லாமல், விவசாயிகளின் விளை நிலங்களில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் தனியார் காற்றாலைக்கு அனுமதியை ரத்து செய்திட வலியுறுத்தி, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் சில காவல்துறை அதிகாரிகள் தனியார் காற்றாலைக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வடக்கு சிலுக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகள் முழுவதும் பெய்யும் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நிலங்கள்தான். இந்த விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் இக்காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கண்மாய்கள், நீர் வரத்துக் கால்வாய்கள், குளங்களைச் சேதப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முத்துசாமிபுரம் ஊருக்கு அருகில் காற்றாலைத் தூண் அமைப்பதற்கு ஜே.சி.பி. மற்றும் கனரக இயந்திரங்களை இயக்க முயன்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் தலைமைக் காவலர் மகாலெட்சுமி  ஆகிய இருவரும் குறிப்பிட்ட மக்களை அடித்து தனியார் காற்றாலை வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் தனியார் காற்றாலை வாகனத்தில் அழைத்துச் சென்றது ஏன்? 8 பெண்கள் உட்பட ஊர் மக்கள் 28 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.  

அரசின் உரிய அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டு வரும் தனியார் காற்றாலைக்குத் தடை விதிக்கவும், இதை எதிர்த்த கிராம மக்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” எனக் கூறினார். தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும், காற்றாலைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!