வேல்முருகனின் அறைக் கதவைத் தட்டியது யார்? நள்ளிரவில் ஹோட்டலில் நடந்தது என்ன?

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், கடந்த 6-ம் தேதி ஞாயிற்றுகிழமை, சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கணேசன் இல்ல விழாவிற்கும், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளுவதற்காகவும்  5-ம் தேதி சனிக்கிழமை இரவு, சேலம் ரெட்டிப்பட்டியில் உள்ள அஸ்வா பார்க் ஹோட்டலில் தங்கி இருந்தார். நள்ளிரவு 2 மணிக்கு, மர்ம நபர் யாரோ வேல்முருகனின் அறைக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். உடனே ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டு, ஹோட்டல் முழுவதும் ஆய்வுசெய்து பார்த்தும் மர்ம நபரைக் கண்டுபிடிக்க முடியாததால், சேலம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுபற்றி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் கேட்டதற்கு, ''தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் மத்திய மோடி அரசாங்கத்தை எதிர்த்து நாங்கள் குரல்கொடுத்து வருவதால், பா.ஜ.க-வில் இருக்கும் சில கருங்காலிகள் நேரடியாக எனக்கு எதிராகக் குரல்கொடுப்பதும், மறைமுகமாக சமூக வலைதளங்களில் பொய்ப் பிரசாரங்களும் மிரட்டல்களும் விடுத்துவருவது வழக்கம். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளுவதில்லை. ஆனால் சனிக்கிழமை இரவு, சேலம் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் உள்ள அஸ்வா பார்க் என்ற ஹோட்டலில் தங்கி இருந்தேன். அன்று  இரவு 2 மணிக்கு, யாரோ கதவைத் தட்டினார்கள். ஹோட்டலில் வேலை பார்ப்பவர்கள் தட்டியிருக்கலாம்; இல்லை எங்க கட்சிக்காரர்கள் தட்டியிருக்கலாம். அப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அந்த ஃபுட்டேஜை கேட்டேன் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. ஹோட்டலுக்கு அருகே, நடிகர் ரஜினிகாந்த்தின் ரசிகர் ரஜினிபழனி என்பவர் என்னைக் கொலைசெய்வதாக சமூக வலைதளங்களில் கூறி இருப்பதாகவும்,  அவர் அல்லது அவருடைய ஆள்கள்கூட வந்திருக்கலாம் என்று என்னுடைய கட்சிக்காரர்கள் கருதினார்கள். அதையடுத்து, சேலம் கமிஷர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்'' என்றார்.

இதுபற்றி ரஜினிபழனியிடம் கேட்டதற்கு, ''நான் 4 மாதத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் சீமான், வேல்முருகன் பற்றி விமர்சனம் செய்தது உண்மை. அது என்னுடைய கருத்துச் சுதந்திரம். ஆனால், அதற்காக கீழ்த்தரமான வேலைகளை நான் செய்ய மாட்டேன். நான் டிரைவராக பாண்டிசேரியில் இருக்கிறேன். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!