வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (08/05/2018)

கடைசி தொடர்பு:15:20 (08/05/2018)

மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடையாது..! உச்ச நீதிமன்றத்தில் கொந்தளித்த தமிழக அரசு

'மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்காது' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காட்டமாகத் தெரிவித்துள்ளது.

போதிய மழை இல்லாத காரணத்தால், மே மாதம் தமிழகத்துக்குக் கொடுக்கவேண்டிய 4 டி.எம்.சி நீரை தர இயலாது என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தது. அதை எதிர்த்து, இந்த மாதத்துக்கான 4 டி.எம்.சி நீரை உடனே திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர், 'கர்நாடகத் தேர்தல் காரணமாக மத்திய அரசு வரைவுத் திட்டம் பற்றி முடிவெடுக்க இயலவில்லை' என்று தெரிவித்தார்.

தமிழக அரசு வழக்கறிஞர், 'மத்திய அரசை நம்பினால், தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கிடைக்காது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றத் தவறியவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்' என்று வாதத்தை முன்வைத்தார். இந்த விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இதுவரை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான். காவிரி நீர்ப் பங்கீட்டை செயல்படுத்தவேண்டியது மத்திய அரசின் கடமை. காவிரி நீர் வரைவுத் திட்டத்தை மே 14-ம் தேதி தாக்கல்செய்ய வேண்டும். அதேநாளில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டு, வழக்கை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.