ட்ராஃபிக் ராமசாமியை தாக்கிய அ.தி.மு.கவினர்... வேடிக்கை பார்த்த போலீஸ்... எல்லை மீறும் அராஜகம்! | This is what happened to traffic ramasamy during protest

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (08/05/2018)

கடைசி தொடர்பு:16:06 (08/05/2018)

ட்ராஃபிக் ராமசாமியை தாக்கிய அ.தி.மு.கவினர்... வேடிக்கை பார்த்த போலீஸ்... எல்லை மீறும் அராஜகம்!

அடிக்கும் அ.தி.மு.க-வினர்... கண்டுகொள்ளாத காவல்துறை... ட்ராஃபிக் ராமசாமிக்கு நடந்த அராஜகம்!

ட்ராஃபிக் ராமசாமியை தாக்கிய அ.தி.மு.கவினர்... வேடிக்கை பார்த்த போலீஸ்... எல்லை மீறும் அராஜகம்!

"அவர விட்டுடுங்க... யாரும் அடிக்காதீங்க... பாவம் அந்த மனுஷன்... போலீஸ்காரங்க, ஆட்கள வரச் சொல்லிட்டு அடிக்கிறத வேடிக்கை பாக்குறீங்களே... அவர அடிக்காதீங்க... அய்யோ, கட்டையால அடிக்குறாங்களே? யாராவது தடுங்க ப்ளீஸ்" என அ.தி.மு.க தொண்டர்களால் கட்டையாலும், துடைப்பத்தாலும் கடுமையாக தாக்கப்பட்ட டிராஃபிக் ராமசாமியைக் காப்பற்றச் சொல்லிக் கதறி அழுதார் அவரின் மாணவியும், உதவியாளருமான ஃபாத்திமா.

டிராஃபிக் ராமசாமி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று (07.05.2018) அடிக்கல் நாட்டினர். அதனால், அ.தி.மு.க-வினரால் மெரினா காமராஜர் சாலை முழுவதும் விளம்பர பலகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நேரத்தில், மருத்துவமனை செல்வதற்காகச் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி அந்த வழியாகச் சென்றார். அப்போது அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைப் பார்த்து, `உடனடியாக விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்' எனப் போராட ஆரம்பித்தார். இதனால் அங்கு வந்த அ.தி.மு.க தொண்டர்கள், அவரை கற்களாலும், கட்டைகளாலும் கடுமையாகத் தாக்கினர். பெண் ஒருவர் துடைப்பத்தால் டிராஃபிக் ராமசாமியைக் கடுமையாகத் தாக்கினார். இந்தத் தாக்குதலை காவல் துறை எப்போதும்போல நன்றாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே தவிர,  டிராஃபிக் ராமசாமி மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்கவோ, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கையோ எடுக்கவில்லை. 

டிராஃபிக் ராமசாமியை துடைப்பத்தால் தாக்க  வரும் பெண்

டிராஃபிக் ராமசாமியை துடைப்பத்தால் தாக்க  வரும் பெண்

அ.தி.மு.க-வினரின் இந்தக் கோர தாக்குதலில் படுகாயமடைந்த டிராஃபிக் ராமசாமியிடம் பேசினோம். "நேற்றைய தினம் அடையாரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தேன். மெரினா சாலை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களால் பயங்கர போக்குவரத்து நெரிசல். அதுமட்டுமில்லாமல் மேலும் பேனர்களை வைப்பதற்காக பிளாட்ஃபார்ம்களைக் குடைந்துகொண்டிருந்தார்கள். பேனர்களை உடனடியாக அப்புறபடுத்தி போக்குவரத்துக்கு நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டிராஃபிக் ராமசாமியைத் தாக்கும் அ.தி.மு.க.வினர்.

டிராஃபிக் ராமசாமியைத் தாக்கும் அ.தி.மு.க.வினர்.

இதனால் நான் எனது காரின் மேல் ஏறி அமர்ந்துகொண்டு பேனர்களை எடுக்குமாறு சத்தம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது அங்கிருந்த காவலர்கள் அ.தி.மு.க மேல் மட்டத்துக்கு போன் செய்தனர். காவலர்கள் போன் செய்த 15 நிமிடத்தில், அ.தி.மு.க. தொண்டர்கள்  சிலர் பெண்களோடு வந்து என்னைத் தாக்க முற்பட்டனர். ஆனால், `பேனரை அகற்றாமல் இங்கிருந்து  நகரமாட்டேன்' என்று நான் சொல்ல, கட்டையாலும், துடைப்பத்தாலும் என்னை அடிக்கத் தொடங்கினர். காவலர்கள் அந்தத் தாக்குதலை வேடிக்கை பார்த்தார்களே தவிர, தடுக்கவில்லை. அடித்தவர்களையும் கைதுசெய்யவில்லை. மாறாக, என்னை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். சாலையில் வைக்கப்படும் பேனர்களால் எவ்வளவு விபத்துகள், எவ்வளவு போக்குவரத்து நெரிசல்கள்? இதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் என்னை அடிக்கிறார்கள். அடிப்பவர்களிடம் இருந்து என்னைக் காக்க வேண்டிய காவலர்களே என்னை அடிக்கவைக்க அ.தி.மு.க-வினரை வரவழைத்திருப்பது எவ்வளவு பெரிய குற்றம்? இதில் நிலைகுலைந்துபோன நான் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். அதன்பின் இரவு என்னை தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், காவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் என்னை வெளியேற்றிவிட்டார்கள்" என்றார், வேதனையுடன்.

டிராஃபிக் ராமசாமியை கட்டையால் தாக்கும் அ.தி.மு.க.வினர்.

டிராஃபிக் ராமசாமியைக் கட்டையால் தாக்கும் அ.தி.மு.க-வினர்.

இந்தத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டிராஃபிக் ராமசாமியின் மாணவியும், உதவியாளருமான ஃபாத்திமாவிடம் பேசினோம். "பேனர்களை அகற்றச் சொல்லி நேற்று காலை சென்னை கமிஷனர், சென்னை கலெக்டர் ஆகியோருக்கு மெயில் வழியாகப் புகார் தெரிவித்துவிட்டேன். ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், மருத்துவமனைக்குச் செல்வதற்காக அய்யாவுடன் நானும்  சென்றேன். அப்படிச் செல்லும்போதுதான் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் பற்றி அ.தி.மு.க-வினருக்குத் தகவல் கொடுத்தது அங்கிருந்த காவல் துறையினர்தான். எங்கள் கண்முன்னே போன் செய்து விவரத்தை அ.தி.மு.க-வினரிடம் கூறினார்கள். சில நிமிடங்களில் அங்கு வந்த அவர்கள், அய்யாவைச் சரமாரியாக் தாக்கினார்கள்.

காவல்துறை

காரின் மேல் இருந்த அய்யாவை இழுத்து கீழே போட்டுத் தாக்கினார்கள். தடுக்கச் சென்ற என்னையும் வயிற்றில் உதைத்தனர். `அவரை விட்டுவிடுங்கள்; வயதானவர்' என்று கத்தினேன். ஆனால், அவர்கள் கொஞ்சம்கூடத் தாக்குவதை நிறுத்தவில்லை. என்னை உதைத்ததில் எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுவிட்டது. அதன்பின்னர் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். எங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், போலீஸார் எங்களைத் திட்டினார்களே தவிர, நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லவே இல்லை" என்றார்.

டிராஃபிக் ராமசாமியைத் தாக்கும் அ.தி.மு.க.வினர்.

நேற்று தாக்குதல் நடந்தபோது காவல் துறை உயரதிகாரி ஒருவர், டிராஃபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிராஃபிக் ராமசாமி, அவரிடம்... ``பேனர்களை அகற்றுங்கள்'' என்றார். அதற்கு அந்தக் காவல் துறை உயரதிகாரி,  ``உனக்கெல்லாம் மரியாதை கொடுத்துப் பேசினது என் தப்புதான்" எனக் கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியினரின் அராஜகம் காவல் துறையையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்