`திமிறி நிற்கும் மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக!' - சீறும் சீமான் | Sand robbers must harvested with iron hand said seeman

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (08/05/2018)

கடைசி தொடர்பு:15:40 (08/05/2018)

`திமிறி நிற்கும் மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக!' - சீறும் சீமான்

நெல்லையில் காவலர் ஜெகதீசன் துரை மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வேளியிட்டுள்ளார்.

சீமான்

அதில் அவர் கூறியிருப்பதாவது, “திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகேயுள்ள நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் ஜெகதீசம் துரை மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் எனும் செய்தியானது அதிர்ச்சியினையும், மனவேதனையையும் தருகிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சகக் காவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணல் என்பது இயற்கை அளித்தக் கொடை, பூமித்தாயின் மடி. அதுவே உலகின் தலைசிறந்த வடிகட்டியுமாகும். நீராதாரத்தைத் தக்கவைக்கும் பெரும் சேமிப்புக் கலனாகவும் அது விளங்குகிறது. அத்தகைய இன்றியமையாத மணல், தமிழகத்தின் அத்தனை ஆறுகளிலிருந்து திருட்டுத்தனமாக அள்ளப்பட்டு தமிழகத்தின் ஜீவநதிகள் யாவும் இன்றைக்குச் செத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கியூமிக் மீட்டர் மணலை அள்ளினால் மூன்று கியூமிக் மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் என்பது இயற்கை விதி. இதனைக் கடைபிடிக்காது வரைமுறையற்று தொடர்ச்சியாக மணலை அள்ளுவதன் மூலம் சுற்றுச்சூழல், சமநிலை சீர்கேட்டு நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் மணல் கொள்ளை என்பதே முற்றிலுமில்லை என அறுதியிட்டுச் சொல்கிற அளவுக்கு அந்த மண்ணின் ஆட்சியாளர்கள் தங்களது இயற்கை வளத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஆந்திராவிலும் கூட மணல் அள்ளுவதற்கு ஏகப்பட்டக் கெடுபிடிகள் போடப்பட்டிருக்கின்றன. 

ஆனால், தமிழகத்திலோ மணல் கொள்ளை மூலம் தமிழகத்தின் இயற்கை வளம் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டு கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்துக்குரிய நீராதாரங்களைத் தடுத்து அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதற்குக்கூட தமிழகத்திலிருந்துதான் மணல் செல்கிறது என்பதன் மூலம் மணல் கொள்ளையின் கோர முகத்தை அறியலாம். மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற ஒரு காவலரையே இன்றைக்கு அடித்துக் கொலை செய்கிறார்கள் என்றால் மணல் கொள்ளையர்கள் எந்தளவுக்கு திமிறி நிற்கிறார்கள் என்பதனையும், அவர்களுக்கு இத்தகையத் துணிவு ஆட்சியாளர்களின் துணையில்லாது வந்திருக்குமா என்பதனையும் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் எத்தகைய ஆட்சி மாற்றமும் இந்த மணல் கொள்ளையர்களைப் பாதிப்பதில்லை. தி.மு.க-வின் ஆட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க-வின் ஆட்சியாக இருந்தாலும் மணல் கொள்ளையர்களின் ஆதிக்கத்துக்கு எவரும் முடிவுகட்ட முனைவதில்லை. ஆற்று மணலைக் கொள்ளையடித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று அரசுகள் ஒப்புக்குச் சொல்கிறதே தவிர, மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக இதுவரை செய்தியில்லை.மாறாக, மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுகிறவர்கள் மீதுதான் வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன என்பதன் மூலம் இவ்வரசுகள் யாருக்கானது என விளங்கிக் கொள்ள வேண்டும்.

மணல் கொள்ளைக்கெதிராக களம் காணுவோர் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தமிழகத்தில் மிகச் சாதாரணமாய் நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அரக்கோணம் அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முற்பட்ட முதன்மைக் காவலர் கனகராஜ், டிராக்டர் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். அதேபோல மணல் கொள்ளைக்கெதிராக நின்ற விருதுநகர் வட்டாட்சியர், காஞ்சிபுரம் வட்டாட்சியர், தாமிரபரணியில் மணல் கொள்ளைக்கெதிராக போராடிய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி சுடலைமுத்து ஆகியோரும் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காது மெத்தனப்போக்கைக் காட்டும் ஆளும் வர்க்கத்தின் துணையோடேதான் இவையாவும் நடக்கிறது.  காவிரியில் நீர் பெறுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவதன் பின்னணியிலுள்ள காரணங்களில், மணல் கொள்ளை முதன்மையானது என இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். 

எனவே, காவலர் ஜெகதீசன் துரையின் கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து தண்டிப்பதோடு, இந்நிலை இனியொரு காவலருக்கோ, சமூக ஆர்வலருக்கோ நிகழாமல் தடுக்க மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும், அனைத்து வித வளச்சுரண்டலையும் கண்காணித்து தடுத்து நிறுத்த தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.