வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/05/2018)

கடைசி தொடர்பு:16:20 (08/05/2018)

`சிசுவின் அழுகுரல் என் மனதுக்குள் ஒலிக்கிறது' - முட்புதரிலிருந்து மீட்ட சமூக ஆர்வலர் உருக்கம்

குழந்தை செல்வம் இல்லாமல் தவமாய் தவமிருக்கும் இந்த மண்ணில் சேலம் டால்மியா போர்ட் பகுதியில் பிறந்த சில மணி நேரமே ஆன அழகான ஒரு பெண் சிசு ஆள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த புதருக்குள் பிளாஸ்டிக் பேக்கில் போட்டு அதன் மேல் கல்லை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்தச் சிசுவை மீட்டு முதலுதவி செய்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் சென்று சேலம் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து அந்த சிசு, இம்மண்ணில் வாழ வாய்ப்பு செய்து கொடுத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சண்முகவேல்.

இதுபற்றி சமூக செயற்பாட்டாளர் சண்முகவேல், ''சேலம் டால்மியா போர்ட் வெள்ளைக்கல் கரடு பகுதியில் என்னுடைய அண்ணன் தங்கராஜும் அவருடைய நண்பரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு போயிருக்கிறார்கள். அப்போது புதர் பகுதியில் குழந்தை அழும் சத்தமும் நாய்கள் கூட்டமாக மோப்பம் பிடித்துக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறார்கள். குழந்தை சத்தத்தை உறுதி செய்துகொண்டு எனக்கு போன் பண்ணினார்கள். உடனே நான் ஓடிப் போய் பார்த்தேன்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர் மண்டிய பகுதியில் பிளாஸ்டிக் பை மடித்து வைக்கப்பட்டு அதன் மேல் 5-க்கும் மேற்பட்ட கற்கள் வைக்கப்பட்டு இருந்தது. நான் புதருக்குள் புகுந்து ஒவ்வொரு கற்களாக அகற்றிவிட்டு பிளாஸ்டிக் பையை மெதுவாக எடுத்து விரித்து உள்ளே பார்த்தேன். பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள்கொடி அகற்றப்படாமல் பெண் சிசு அழுதுகொண்டிருந்தது. உடனே எடுத்து அரவணைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த மருத்துவருக்குப் போன் பண்ணி தகவல் தெரிவித்தேன். உடனே அவரும் வந்து முதலுதவி செய்தார்.

பிறகு, சூரமங்கலம் காவல்துறைக்கும் சேலம் எஸ்.பி-யிடமும் சொல்லிவிட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ந்தோம். குழந்தைமீது கற்கள் வைத்திருந்ததால் கால் பகுதியில் எலும்பு முறிவும் நெஞ்சு பகுதியில் சிராய்ப்புகளும் இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், இந்தத் தருணம் வரை அந்த சிசுவின் அழுகுரல் என் மனதுக்குள்ளேயே ஒலித்துக்கொண்டிருக்கிறது'' என்றார்.