வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (08/05/2018)

கடைசி தொடர்பு:15:22 (08/05/2018)

``லாவண்யா இப்போ நல்லா இருக்கா... அவளை காப்பாத்தினவங்களுக்கு நன்றி!” உருகும் லாவண்யா தந்தை

பொண்ணுங்க படிச்சு மேல மேல முன்னேறி வரணும்னு நினைக்குறவன் நான். லாவண்யா எம்.எஸ்.சி முடிச்சு பி.எச்டி பண்ணனும்னு ஆசைப்பட்டுச்சு.

ந்தக் காட்சி இன்னமும்கூட நெஞ்சில் ஒரு விதமான பதைபதைப்பை உண்டு பண்ணுகிறது. இன்றோடு சரியாக ஒரு வாரம் கழிந்திருக்கிறது. எந்தவொரு பாதிப்பிலிருந்தும் அடுத்தடுத்த சில நாள்களில் மீண்டு வரக்கூடிய  நம்மால் குறிப்பாகப் பெற்றோர்களால் இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை.

லாவண்யாவை காதலன் தாக்கும் சம்பவம்

கடந்த வாரம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுகலை வேளாண்மை மாணவி லாவண்யா, தான் தங்கியிருக்கும் தாமரை விடுதியிலிருந்து வெளியே வருகிறார். அப்போது அங்கிருந்த ஓர் இளைஞர் லாவண்யாவைக் கல்லால் தாக்க நிலை தடுமாறி விழும் அவரை கத்தியைக் கொண்டு கழுத்தை அறுக்கிறார். லாவண்யா சத்தம் போட்டுக் கூச்சலிட அக்கம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று போராடி லாவண்யாவைக் காப்பாற்றுகிறார்கள். அடுத்த சில மணித்துளிகளில் இந்தக் காட்சி வாட்ஸ் அப் வழியாகத் தமிழகம் முழுவதும் பரவுகிறது. காதலனே தன் காதலியைக் கழுத்தறுக்கும் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இதயம் சுக்குநூறாய் உடைகிறது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த லாவண்யாவைக் கண்டு கண்ணீர்ப் பெருக்கெடுக்கிறது. 

ஒருபக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாவண்யாவுக்காகப் பலரும் பிரார்த்தனை செய்ய, மறுபக்கம் ``பொம்பளப்புள்ள பேசலைன்னா எதுக்குடா கழுத்தறுக்கணும், ஆசிட் ஊத்தணும். நம்ம வீட்டுல உள்ள பொண்ணுங்களையும் நினைச்சுப் பாருங்கடா” என ஆண்களும் சமூக வலைதளங்களில் கொதித்துப் போய் நவீன்குமாருக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டார்கள். 

எங்கோ முகம் தெரியாத லாவண்யாவை தன் மகளாய், சகோதரியாய், தோழியாய் நினைத்து தற்போது வரை அவருக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் பலர் நின்றுகொண்டிருக்க லாவண்யா இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள நாம் தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டோம்.  நாலைந்து முறை அழைத்தும் தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. பிறகு இறுதி முயற்சியில் லாவண்யாவின் தந்தை முனியரசு எடுத்துப்பேசினார். 

``ஹலோ சார், நான் லாவண்யாவோட அப்பா பேசுறேன். மன்னிச்சிடுங்க. தொடர்ந்து போன் வந்துட்டே இருக்கு சார். அதான், போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். இப்போக்கூட எனக்கு எதுவும் பேசுறதுக்கு விருப்பம் இல்ல. இன்னைக்கு நான் ஆத்திரமா பேசி நீங்க அதை எழுதி பத்திரிகையில வந்துட்டா அடுத்தடுத்து தப்பு நடக்காம போயிடுமா சார். தப்பு பண்றவன் என்னைக்கும் தப்பு பண்ணிட்டேதான் இருப்பான். ஆனாலும், அன்னைக்கு எம்பொண்ணுக்காக ஓடிப்போய் உதவி பண்ணுனாங்களே. அந்த மனுசங்களுக்காகத்தான் இப்போ உங்க போனை எடுத்துப் பேசுறேன்” உள்ளுக்குள் இருக்கும் ஆதங்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசுபவரிடம் ``லாவண்யா இப்போ எப்படி இருக்காங்க” என்றோம். 

``லாவண்யா இப்போ நல்லா இருக்கா. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். ஆனா, என்னாலதான் அந்தச் சம்பவத்துல இருந்து இன்னும் மீண்டு வர முடியல. பொண்ணுங்க படிச்சு மேல மேல முன்னேறி வரணும்னு நினைக்குறவன் நான். லாவண்யா எம்.எஸ்.சி முடிச்சு பி.எச்டி பண்ணனும்னு ஆசைப்பட்டுச்சு. உன் விருப்பம் மா நீ என்ன வேணாலும் படி. அப்பா இருக்கேன்னு நம்பிக்கை கொடுத்திருந்தேன். 22 வருஷமா நெஞ்சுல சுமந்து வளத்த பொண்ண இப்புடி ரோட்டுல வெச்சு கழுத்தறுத்துருக்கானே. அந்த வீடியோ பாத்துட்டு என் நாடித்துடிப்பே நின்னு போயிடுச்சுங்க. அன்னைக்கு மட்டும் அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஓடிப்போய் எம்பொண்ண காப்பாத்தலைன்னா எங்க குடும்பமே இப்போ ஒடைஞ்சுப் போயிருக்கும்ங்க. எத்தனையோ இடங்கள்ல பொண்ணுங்களுக்கு என்னவெல்லாமோ நடக்குது. பொம்பளைப் புள்ளைங்க வெளியில போயிட்டு வீடு திரும்பி வர்றதுக்குள்ள ஒவ்வொரு பெத்தவங்களும் பரிதவிச்சிக்கிட்டுத்தான் இருக்குறாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியப் போகுது. இங்க தப்போ சரியோ எது பண்ணினாலும் பாதிக்கப்படுறது பொண்ணுங்க மட்டும்தான். தப்பு பண்றவங்க திருந்தாதவரை, தப்பு பண்றவங்களைத் தட்டிக் கேட்காத வரை யாரும் திருந்தப்போறதில்ல. இன்னைக்கு லாவண்யா பொழச்சிட்டா. ஆனா, நாளைக்கு?” என்ற பெரும் கேள்வியோடு முடிக்கிறார் முனியரசு. 


டிரெண்டிங் @ விகடன்