கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை! - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

இது காட்டாற்று அருவி என்பதால் எப்போது வெள்ளப் பெருக்கு எற்படும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே அவ்வப்போது குளிக்கத் தடை விதித்தும் நீக்கியும் வருகிறோம்

கோடை மழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் இருக்கும் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.   

கும்பக்கரை அருவி

சென்ற வாரம் வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடையை நீக்கியிருந்த வனத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்து 4-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதித்தனர். மழை இன்னும் குறையாத காரணத்தால் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு இன்றும் குறையவில்லை. எனவே 5-ம் நாளாக இன்றும் தடை தொடர்கிறது. இது கோடைக்காலத்துடன் இணைந்த விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கும்பக்கரைக்கு வருவது வழக்கம். வெளியூர் சுற்றுலாப் பயணிகள் பலருக்கு, தடையைப் பற்றிய அறிவிப்பு தெரியாததால் கும்பக்கரைக்கு வந்து கொண்டாட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். 

இதுகுறித்து வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், "கும்பக்கரைக்கு இரண்டாவது முறையாக வருகிறேன். இதற்கு முன்னர் வந்தபோதும் குளிக்க தடைவிதித்திருந்தனர். இந்த முறையும் அருவியைக் காண முடியவில்லை என்பது சிறிது வருத்தமளிக்கிறது" என்றார். "இது காட்டாற்று அருவி என்பதால் எப்போது வெள்ளப் பெருக்கு எற்படும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே, அவ்வப்போது குளிக்க தடை விதித்தும் நீக்கியும் வருகிறோம்" என்றார் வனத்துறை அதிகாரி ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!