`நடிகர் சங்க நிலம் விற்றதில் மோசடி!' - ராதாரவி, சரத்குமார் மீது நாசர் புகார்

நில மோசடி தொடர்பாக, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் காவல்துறையிடம் நாசர் புகார் அளித்தார்.

நில மோசடி தொடர்பாக, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத்  தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நிலஅபகரிப்புப் பிரிவினரிடம் நடிகர் நாசர் நிலம்தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

சரத்குமார் மீது நாசர் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம், வேதமங்களம் கிராமத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006 ம் ஆண்டு முறைகேடாக விற்று, அந்தத் தொகையைக் கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் சர்ச்சை கிளம்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் மனுஅளித்தார்.

அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. தென்னரசுவிடம் சர்ச்சைக்குரிய நிலம்தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!