`இது எதிர்பார்க்கப்பட்ட நாடகம்தான்' - மத்திய அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்! | ttv dinakaran condemns central government on cauvery issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/05/2018)

கடைசி தொடர்பு:18:00 (08/05/2018)

`இது எதிர்பார்க்கப்பட்ட நாடகம்தான்' - மத்திய அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்!

காவிரி விவகாரத்தில் மனசாட்சியற்ற, மனிதநேயமற்ற செயலை மத்திய அரசு செய்துவிட்டது என டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்யச் சொன்ன வரைவு திட்டத்துக்கு மேலும் அவகாசம் கோரியுள்ளது மத்திய அரசு. இன்றைய விசாரணையில் கர்நாடக தேர்தல் முடிந்த பின்பு வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் செவி சாய்த்துத் தேர்தல் முடிந்த பின்பு அதாவது, 14-ம் தேதி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியுள்ளது. மத்திய அரசின் செயலை அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``மனசாட்சியற்ற, மனிதநேயமற்ற செயலை மத்திய அரசு செய்துவிட்டது. தன் அரசியல் ஆதாயத்திற்கான ஆடுகளமாகக் காவிரி விவகாரத்தை பாஜக பயன்படுத்துகிறது. 

24 மணி நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசால் அமைக்க முடியும். ஆனால், திட்டமிட்டு இழுத்தடிக்கும் வேலையை மத்திய அரசு செய்கிறது. இதற்கு பழனிசாமி அரசு ரகசியக் கூட்டாளியாகச் செயல்படுகிறது. கர்நாடக தேர்தலுக்கும், மேலாண்மை வாரியம் அமைவதற்கும் சம்பந்தமில்லை என்று சொன்ன உச்ச நீதிமன்றம், தற்போது கர்நாடக தேர்தலைச் சுட்டிக்காட்டி அனுமதி வாங்கிய மத்திய அரசின் வாதத்தை முறியடிக்கத் தவறிவிட்டது. தமிழக மக்களின் நியாயத்தை சுய நலத்திற்காக மத்திய அரசு சிதைத்து வருகிறது. இது எதிர்பார்க்கப்பட்ட நாடகம்தான். மேலாண்மை வாரியத்துக்காகக் காத்திருந்த தமிழகம் தற்போது வரைவு திட்டத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவலத்தை ஏற்படுத்திய பாஜக அரசு மற்றும் அதன் ரகசியக் கூட்டாளி பழனிசாமி அரசுக்கும் தக்க பாடத்தைத் தமிழக மக்கள் புகட்டுவார்கள்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க