வாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டல் - போலீஸ் கமிஷனரிடம் சென்ற புகார் 

மிரட்டல்

'வாட்ஸ் அப்பில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவகுமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை கொளத்தூரை அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது. `நான் கடந்த 2006-ல் யோகக்குடில் நிறுவி, 'மதம் மறப்போம், மனிதம் வளர்ப்போம்' என்ற இரு கோட்டுபாடுகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி என்னுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், என்னையும் என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தனர். மேலும், என்னைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியிருந்தனர். எனவே, எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு, நான் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தேன். அதற்காக எனக்கு தற்போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டல் ஆடியோவும் என்னிடம் உள்ளது. எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் ஏற்கெனவே என்மீது  போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதற்கு விளக்கமும் கொடுத்த பிறகு, தற்போது தொந்தரவு செய்கின்றனர்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!