`இரவு 9 மணிக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்; காலை 6 மணிக்கு கொல்லப்பட்ட காவலர் ஜெகதீஷ்' | Valliyoor police murder - Communist party cadre reveals important informations

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (08/05/2018)

கடைசி தொடர்பு:17:26 (08/05/2018)

`இரவு 9 மணிக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்; காலை 6 மணிக்கு கொல்லப்பட்ட காவலர் ஜெகதீஷ்'

விஜயநாராயணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இரவு 9 மணிக்கு அழைத்ததின்பேரில் தன் கணவர் ஜெகதீஷ்துரை சென்றதாகவும் காலை 6 மணிக்கு அடித்துக்கொல்லப்பட்டதாகவும் அவரின் மனைவி தெரிவித்துள்ளதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் காவல்நிலையத்தில் உளவுப்பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த கெஜதீஷ்துரை கடந்த 6-ம் தேதி, இரவு பாண்டிச்சேரி எனும் கிராமம் அருகே மணல் கொள்ளையர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க முயலும் யாரையும் துணிச்சலோடு படுகொலை செய்கிற அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதற்கு இச்சம்பவம் எடுத்துக்காட்டாகும் என்று கூறியுள்ளார்.

''இந்தக் கொலையின் பின்னே மணல் கொள்ளையர்களோடு காவல்துறையில் உள்ளவர்களும் ஆளுங்கட்சியினரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பொதுமக்களிடம் உள்ளது'' என்று கூறியுள்ள அவர், "இரவு 9 மணியளவில் விஜயநாராயணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழைத்ததன் காரணமாகவே தன் கணவர் சென்றதாகவும், எனவே ஜெகதீஷ்துரையின் கொலையில் காவல்துறை அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜெகதீஷ்துரையின் மனைவி கூறியுள்ளார். இரவு 12 மணியளவில் மூலக்கரைப்பட்டி காவலர்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டாரா என்று விசாரித்து சென்றதை அடுத்து, ஜெகதீஷ்துரையின் உறவினர்கள் விஜயநாராயணம் காவல்நிலையம் சென்று தேடியுள்ளனர். காலை 6 மணி அளவில் விஜயநாராயணம் கிராமத்துக்கு அருகே ஜெகதீஷ்துரை அடித்துக் கொல்லப்பட்ட செய்தி கிடைத்துள்ளது. இச்சம்பவத்தை அறிந்து ஜெகதீஷ் துரையின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் மற்றும் மாவட்டத் தலைவர்கள் தலைமையில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்துள்ளனர்.

நம்பியாற்றில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. கொள்ளையைத் தடுக்க முயல்பவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். 2012-ல் சதீஷ், சுயம்பு செல்லப்பா எனப் பலரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளில் சிலரும் மணல் கொள்ளைக்கும் மனித கொலைக்கும் துணை போவதாகத் தெரிகிறது. எனவே, தமிழக அரசு, கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்வதோடு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்; குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்படுவதை மாநில அரசு உத்தரவாதம் செய்வதோடு மணல் கொள்ளையைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், ஜெகதீஷ் துரையின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.