வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (08/05/2018)

கடைசி தொடர்பு:20:02 (08/05/2018)

''எங்களை மட்டுமே குறிவைக்கிறார்கள்!'' - ராக்கெட் ராஜா கைதுக்கு எதிராகக் சில குரல்கள்

''எங்களை மட்டுமே குறிவைக்கிறார்கள்!'' - ராக்கெட் ராஜா கைதுக்கு எதிராகக் சில குரல்கள்

ராக்கெட் ராஜாவை ரவுண்ட் கட்டித் தூக்கியிருக்கிறது தமிழக போலீஸ்! விருகம்பாக்கம் காவல்நிலையத்தில், ராக்கெட் ராஜாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நேரத்தில், அவர் சார்ந்த சமுதாயத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கைது விவகாரம் தென் மாவட்டங்களிலும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில், நெல்லையில் பேராசிரியர் செந்தில்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். செந்தில் குமாரின் மாமா குமார் என்பவரைத்தான் ரவுடிக் கும்பல் கொலை செய்ய வந்துள்ளது. ஆனால், கொலைக்கும்பலைக் கண்டதும் குமார் தப்பி ஓடிவிடவே, ஆத்திரமடைந்த கொலைக்கும்பல், அங்கிருந்த செந்தில்குமாரை கொடூரமாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடிவிட்டது. இந்தக் கொலை வழக்கில், ராக்கெட் ராஜா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுநாள் வரையிலும் நெல்லை போலீஸாருக்குப் பிடிகொடுக்காமல், தலைமறைவாகச் சுற்றித் திரிந்த ராக்கெட் ராஜாவை, சென்னை போலீஸ் சுற்றி வளைத்துக் கைது செய்திருப்பது எதிர்பாராத திருப்பம்.

ராக்கெட் ராஜா

ராக்கெட் ராஜாவின் கூட்டாளியான சுந்தர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல்  கிடைத்துள்ளது. இதையடுத்து ஹோட்டலைச் சுற்றிவளைத்தப் போலீஸார், சுந்தரைக் கைதுசெய்து விசாரிக்கவே, அதே ஹோட்டலில், ராக்கெட் ராஜா தங்கியிருப்பதை அறிந்து அலர்ட்டாகியிருக்கிறது. ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறையைப் போலீஸார் சுற்றிவளைத்ததும் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், சரணடைந்திருக்கிறார் அவர். தங்கள் பிடிக்குள், ராக்கெட் ராஜா வந்தபிறகும் செய்தி வெளியே கசிந்துவிடாமல், விசாரணை செய்திருக்கின்றனர் காவல்துறையினர். ஆனால், அதற்குள் ராக்கெட் ராஜாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப் குரூப்களில், `கைது விவகாரம்' பரபரவென ஃபார்வேர்டு ஆகவே, ஒட்டுமொத்தச் சமுதாயத்தினரும் சம்பந்தப்பட்ட விருகம்பாக்கம் காவல்நிலையம் முன் திரளத் தொடங்கினர். ராக்கெட் ராஜாவின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தக் கூட்டத்தினர், நேரம் செல்லச்செல்ல காவல்துறைக்கு எதிராகவும், ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். 

நிலைமை விபரீதமாவதைக் கவனித்த காவல்துறை, அவர்களோடு பல மணிநேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட சமுதாயத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.... ``ராக்கெட் ராஜா மீது சென்னையில் இப்போது எந்தக் கேஸும் இல்லை. நெல்லைப் பேராசிரியர் கொலை வழக்கிலும்கூட, சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவரைக் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இப்போது கைது செய்தபிறகு, `அனுமதி இல்லாத துப்பாக்கியை ராஜா வைத்திருந்தார்' என்கிறது போலீஸ்.

இந்த ஆட்சி அதிகாரத்தில், எங்கள் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று நாங்கள் ஏற்கெனவே போராடி வருகிறோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் இதே நிலைதான். இந்தச் சூழ்நிலையில், சமூகத்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடியவர்கள் மீதும் வழக்குகளைப் போட்டுத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்துவருகிறார்கள். சமீபத்தில், செட்டிகுளம் ராஜைக் காவல்துறை கைது செய்தது. இந்தக் கைதைக் கண்டித்துத் தென்மாவட்டங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவரை அவசரம் அவசரமாக விடுதலை செய்தார்கள். இப்படி சுபாஷ் பண்ணையார், வழக்கறிஞர் சம்போ செந்தில், ராக்கெட் ராஜா என்று தொடர்ச்சியாக எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே குறிவைத்துக் கைது செய்துவருகிறது காவல்துறை. இதன் பின்னணிதான் என்ன.... ஒட்டுமொத்தமாக எங்கள் சமூகத்தையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதுதான் இந்த அரசின் நோக்கமா?

ராக்கெட் ராஜா கைது

அவரவர் சமுதாய உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்ற முறையில் பல்வேறு தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அந்தவரிசையில் எங்கள் சமூக உரிமையை மீட்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து குற்றம் சுமத்துவதென்பது தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியாகவேத் தெரிகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த எங்கள் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து நாளை (9-5-2018) கலந்தாலோசிக்கப் போகிறோம். இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது, இதுபோன்ற கைதுகளைக் கண்டித்து அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து அப்போது முடிவெடுப்போம்'' என்கிறார்கள் தீராத ஆவேசத்துடன்.

இதற்கிடையில், இந்தக் கைது குறித்து விளக்கும் காவல்துறை தரப்பினர், ``தனிப்பட்ட விரோதம் இங்கே யாருக்கும் இல்லை. ஆதாரபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே நாங்கள் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அவர்கள் தரப்பில் நியாயம் இருந்தால், அதனை அவர்கள் நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும்'' என்கிறார்கள் சுருக்கமாக. 
அடுத்து என்ன நடக்குமோ....?


டிரெண்டிங் @ விகடன்