ரிசார்ட்டாக மாறிய அரசு கட்டிக்கொடுத்த பசுமை வீடுகள்! சிக்கிக்கொண்ட வீட்டு உரிமையாளர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, ஆச்சக்கரை பகுதியில் சட்ட விரோத ரிசார்ட் ஆக செயல்பட்ட இரண்டு பசுமை வீட்டு உரிமையாளருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, ஆச்சக்கரை பகுதியில் சட்ட விரோத ரிசார்ட் ஆக செயல்பட்ட இரண்டு பசுமை வீடு, உரிமையாளருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தமிழக அரசின் மலிவு விலை வீட்டுத் திட்டத்தில் ஏழை மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. அப்படி மசினகுடி ஆச்சக்கரை பகுதியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மொய்தீன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பசுமை வீடுகள், ரிசார்ட் ஆக செயல்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த கிராம சபைக் கூட்டத்தில், ஆச்சக்கரை பகுதியைச் சேர்ந்த 20 முதல் 25 குடும்பத்தினர் சட்ட விரோதமாகப் பசுமை வீடுகள் ரிசார்ட்டாகச் செயல்படுவது தொடர்பாகப் புகார் எழுப்பியுள்ளனர். இதையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் பசுமை வீட்டை ஆய்வு செய்ததுடன், அங்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், “இந்த வீடுகள் தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. வர்த்தக நோக்கில் இவ்வீடுகளைப் பயன்படுத்துவது தவறு. இது தொடர்பாக வீட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம், அவரது விளக்கத்தை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “3 முதல் 4 நபர்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில், யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக ரிசார்ட்டுகளை  நடத்தி வருகின்றனர். அவர்கள்மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னை தொடர்பாகக் கலெக்டரிடம் மனு அளிக்கவுள்ளோம்” என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!