வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (08/05/2018)

கடைசி தொடர்பு:20:20 (08/05/2018)

மணல் கடத்தலில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் குண்டாஸ் சட்டம் பாயும்! நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை

நெல்லையில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலர் மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

நெல்லையில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலர் மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். .

ஆட்சியர் எச்சரிக்கை

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டுணான்ட் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செஞ்சிலுவை சங்க வளாகத்தில் சங்கக் கொடியை ஏற்றி வைத்ததுடன், பல்வேறு மருத்துவ உபகரணங்களைத் தொடங்கி வைத்தார். 

அத்துடன், ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், நெல்லை செஞ்சிலுவைச் சங்க சேர்மன் சார்லஸ் பிரேம்குமார், துணைத் தலைவர் மரியசூசை, பொருளாளர் பிரமச்சந்திரன் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, கருமேனியாறு, கோதையாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதைத் தடுக்க கள அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். மணல் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து மணல் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மணல் கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும். மணல் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இன்று ஒரே நாளில் இரு நபர்களைக் குண்டர் தடுப்புச் சட்டம் மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால், இனிமேல் மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.