வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (08/05/2018)

கடைசி தொடர்பு:18:20 (08/05/2018)

நேற்று சிகிச்சை... இன்று பலி... கோவை யானை உயிரிழந்த சோகம்!

கோவையில், 55 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது.

கோவையில், 55 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது.

யானை

கோவை, நரசிபுரம் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாகக் குட்டியுடன் சுற்றித் திரிந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் யானை, நேற்று முன்தினம் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது, யானைக்கு நீர் சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், யானையின் சாணத்தில் குடற்புழு இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானைக்கு குளூக்கோஸ் ஏற்றப்பட்டு, ஊட்டச்சத்து உணவு அளிக்கப்பட்டது.

பின்னர், கிரேன் மூலம் யானையை எழவைத்தனர். இதையடுத்து, தன் குட்டியைத் தேடி தாய் யானை வனப்பகுதிக்குச் சென்றது. ஆனால், அந்த யானை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அந்த யானை இன்று உயிரிழந்தது. குடற்புழு மற்றும் வயது முதிர்வின் காரணமாக அந்த யானை உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

``நாங்கள் 30 சதவிகிதம் குடற்புழுவைதான் நேற்று அகற்றினோம். 70 சதவிகிதம் குடற்புழுவை அகற்ற முடியவில்லை. அந்தப் புழு வெளியேறுவதற்கான மருந்துகள் கொடுத்திருந்தோம். ஆனால், அதன் உடல் முழுவதுமே பரவியிருந்தது. தற்போது, பிரேத பரிசோதனை செய்து, அந்த யானையை அங்கேயே புதைத்துவிட்டோம். அதன் சாம்பிள்களையும் ரிப்போர்ட்டுக்காக அனுப்பி வைத்துள்ளோம்’’ என வனத்துறை தரப்பில் கூறியுள்ளனர்.

“55 வயது யானைக்கு குடற்புழு, வயது முதிர்வு என்று காரணம் சொல்வதைக்கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், 10 வயது யானையின் மரணத்துக்கும் குடற்புழுதான் காரணம் என்று வனத்துறை தெரிவித்து வருகின்றனர். யானைகளுக்கு பிரேத பரிசோதனை செய்யும்போது, சாம்பிள்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். அதற்கான ரிப்போர்ட்களை எந்த அளவுக்கு எடுத்து வைத்துள்ளனர். அந்தப் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு எடுக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளன” என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.