வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (09/05/2018)

கடைசி தொடர்பு:09:58 (09/05/2018)

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?! குழப்பமில்லாமல் முடிவெடுக்க வழிகாட்டும் விகடன்

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?! குழப்பமில்லாமல் முடிவெடுக்க வழிகாட்டும் விகடன்

விகடன் பிரசுரம் மற்றும் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து ப்ளஸ் டூ மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த இலவச ஆலோசனை முகாமை வரும் 13-ம் தேதி சென்னையில் நடத்துகிறது. `விகடன் கல்வி வழிகாட்டி' என்ற பெயரில் சென்னைத் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், இந்த நிகழ்ச்சி அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் ப்ளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகளின் மேற்படிப்பு பற்றியும், குறிப்பிட்ட படிப்புகளைப் படிப்பதால் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும், மாணவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும், பேராசிரியர்களும் ஆலோசனை வழங்க உள்ளனர். ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, வெற்றிக்கான பாதை எது, பொறியியல் மற்றும் உயர் கல்வியினால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை... `பெற்றோரும், குழந்தைகளும்', `போட்டித்தேர்வும் வாழ்க்கை முறையும்' உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

``மத்திய - மாநில அரசுகள் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற, உயர்கல்வியில் எந்தெந்தப் பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும்'' என்பது குறித்து சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆலோசனை வழங்குகிறார். இந்த அகாடமி, விகடன் கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாமை விகடனுடன் இணைந்து வழங்குகிறது. மேலும், கல்வியாளர் டாக்டர் எஸ்.எஸ்.எம்.அப்துல் மஜித், சட்டத்துறை பேராசிரியர் டாக்டர் கே.நிலாமுதீன் ஆகியோர் உயர்கல்வி மற்றும் அதற்குரிய வேலைவாய்ப்புகள், ஆன்-லைன் பொறியியல் கவுன்சலிங்  குறித்து ஆலோசனை வழங்குகிறார்கள். 

கல்வி

இந்த நிகழ்ச்சி குறித்து திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் கூறுகையில், ``எல்லாத் தேர்வுகளும் முடிந்துவிட்டன. குழந்தைகள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள், என்ன படிக்கப் போகிறார்கள், என்ன செய்ய வேண்டும்? என்ற பதற்றம் எல்லாப் பெற்றோரிடமும் இருக்கிறது. அதுபோன்றதொரு தேடல் அனைவரிடமும் உள்ளது. தங்களின் குழந்தைகள், எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற கனவு எல்லாத் தகப்பன்களுக்கும், தாய்மார்களுக்கும் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கிறது. மே 13-ம் தேதி வாருங்கள். உங்கள் கனவுகள் கைகூட இந்த நிகழ்ச்சியில் வழி கிடைக்கும்'' என்றார்.

உயர் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், ``கல்வி சார்ந்த வாய்ப்புகளை, பெற்றோரும், ஆசிரியரும் மாணவர்களும் அறிந்திருந்தால்தான், வருங்காலத்துக்குத் தேவையான சரியான பாதையை அவர்களால் தேர்வுசெய்ய முடியும். பிளஸ்-2க்குப் பின், 80 வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத முடியும். அதில், 75 வகையான தேர்வுகளுக்கு, மதிப்பெண் முக்கியமில்லை. இதுபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? மேலும், சாதாரணப் படிப்பை முடித்துவிட்டு, நல்ல வாய்ப்புகளை அறிந்து, பெரிய வேலையில் சேருவோர், நல்ல நிலைக்கு வந்துவிடுகின்றனர். ஐ.ஐ.டி, மத்திய பல்கலைக் கழகங்கள் உட்பட பல இடங்களில், ஒருங்கிணைந்த படிப்புகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. 

கல்வி என்பது வேலைக்காகவா? அல்லது வேலைக்காக கல்வியா? என்ற குழப்பம் உள்ளது. இன்னொன்று பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தால் நிறைய எதிர்காலம் உண்டு? உண்மையில் வெளியில் சொல்கிற மாதிரி அந்த படிப்புகளுக்கெல்லாம் வேலைவாய்ப்புகள்  உள்ளனவா, பொறியியலில் கம்யூட்டர்  சயின்ஸ் படித்தால்தான் வேலை கிடைக்குமா, எல்லோரும் கம்யூட்டர் படித்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்கிறார்களா? இதையும் தாண்டி என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானித்துவிடுமா? என்பன போன்ற எண்ணெற்ற கேள்விகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம், 'விகடன் கல்வி வழிகாட்டி' யில் விடைகிடைக்கும்" என்றார்.

இந்த முகாமில் கலந்துகொள்ள, முன்பதிவு செய்ய விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும். சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து, நிகழ்ச்சி நடைபெறும் தேனாம்பேட்டைக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 97899 77822, 95000 68144 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டு உயர்கல்வி வேலைவாய்ப்பு ஆலோசனையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்