வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/05/2018)

கடைசி தொடர்பு:21:20 (08/05/2018)

மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்ட காவலர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காவலர் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காவலர் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 

காவலர் உடலுக்கு அரசு மரியாதை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பரப்பாடியில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற முதல்நிலை காவலர் ஜெகதீசன் துரையை மணல் கொள்ளையர்கள் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவல்துறையைச் சேர்ந்தவருக்கே மணல் கொள்ளையரிடமிருந்து பாதுகாப்பு இல்லாத நிலையில், அப்பாவி பொதுமக்களால் எப்படி மணல் கொள்ளையைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ, போலீஸுக்கு தகவல் கொடுக்கவோ முடியும் என்கிற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஜெகதீசன் துரையின் உடல் உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை வாகனம் மூலம் அவரது உடல் சொந்த ஊரான சிந்தாமணிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காகச் சிறிது நேரம் வைக்கப்பட்டது. அப்போது, காவல்துறை தென்மண்டல ஐ.ஜி-யான சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சாரட்கர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் உறவினர்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் 

பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் அவருடைய உடலுக்கு இறுதிப் பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ஜெகதீசன் துரையின் உறவினர்கள், தென்மண்டல ஐ.ஜி-யிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஜெகதீசன் துரை, மணல் கொள்ளையைத் தடுக்கும் முயற்சியில் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தை வீர மரணமாக அறிவிக்க வேண்டும்.

அத்துடன், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ஜெகதீசன் துரையின் குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும். அவரின் மனைவிக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும்’ என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி-யான. சைலேஷ்குமார் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஜெகதீசன் துரை குடும்பத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வருக்குப் பரிந்துரை செய்யப்படும். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.