வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/05/2018)

கடைசி தொடர்பு:22:00 (08/05/2018)

`ராணுவத்தை அனுப்பாதே; காவிரியை அனுப்பு!’ - மத்திய அரசை எச்சரிக்கும் காவிரி உரிமை மீட்பு குழு

மத்திய அரசு தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்பும் போது இங்கு அனுப்ப கூடாது என தமிழக அரசு தடுக்க வேண்டும் மறுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் விமான படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக காவிரி உரிமை மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்பும்போது, இங்கு அனுப்பக் கூடாது என  தமிழக அரசு தடுக்க வேண்டும் மறுக்க வேண்டும்.கட்ட பஞ்சாயத்து நடைபெறும் இடமாக உச்ச நீதிமன்றத்தை மாற்றி விடக்கூடாது என தீபக் மிஸ்ரா ஆயத்தை கேட்டு கொள்கிறோம் என காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் விமான படைதளத்தை முற்றுகையிட்டு வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்திய அரசே தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்பாதே காவிரியை அனுப்பு. தீர்ப்பாயத்தில் கூறியுள்ளபடி கட்டமைப்பும் அதிகாரமும் உள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி டெல்டாவை ராணுவ முகாமாக மாற்றக் கூடாது.மத்திய அரசு இனபாகுபாட்டு நோக்கத்தோடு கால அவகாசம் கேட்டு கேட்டு மேலாண்மை வாரியம் அமைக்காமல் மறுத்து வருவதை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. 

ஒவ்வொரு முறையும் போக்குகாட்டி அவகாசம் கேட்டு தந்திரமாக தள்ளி வைக்கக் கூடிய மத்திய அரசின் சூழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துக் கொண்டிருக்கிறது. இனி அப்படி செய்யாமல் ஒரு கட்ட பஞ்சாயத்து நடைபெறும் இடமாக உச்ச நீதிமன்றத்தை மாற்றி விடக்கூடாது என தீபக் மிஸ்ரா ஆயத்தை கேட்டு கொள்கிறோம். 

தமிழக அரசு, மத்திய அரசின்  நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது. தமிழக மக்களின் பக்கம் நின்று காவிரி உரிமைக்கு போராட வேண்டும். மத்திய அரசு ராணுவத்தை அனுப்பும்போது இங்கு அனுப்ப கூடாது என  தடுக்க வேண்டும்; மறுக்க வேண்டும். காவிரி படுகையைப் பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தீபக் மிஸ்ரா காவிரி வழக்கில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், 1956ல் போடபட்ட தண்ணீர் பகிர்வு சட்டத்திற்கு முரணாகவும் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றை மாற்றி அமைக்க உச்ச நீதிமன்றத்தில் அரசமைப்பு சட்ட ஆயம் அமைத்து காவிரி வழக்கை அந்த ஆயத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான மனுவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் விமானப் படை தளத்தை பெரிய அளவில் முற்றுகையிட்டு வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. தமிழர் உரிமை, உழவர் உரிமை, தமிழ் நாட்டு உரிமைகளைப் பெறவே இந்த போராட்டம், காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள் என பலர் கலந்து கொள்வார்கள்’’ என கூறினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க