வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (08/05/2018)

கடைசி தொடர்பு:21:45 (08/05/2018)

“டீச்சர் எங்க போறீங்க…?” ஜாக்டோ-ஜியோ குழுவினர் போலீஸிடம் சிக்கிய காட்சிகள்

சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்குச் சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பாக இருக்கிறது.

“டீச்சர் எங்க போறீங்க…?” ஜாக்டோ-ஜியோ குழுவினர் போலீஸிடம் சிக்கிய காட்சிகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் சென்னைக் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தையொட்டி, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை பாதியிலேயே நிறுத்திக் கைதுசெய்யும் நடவடிக்கைகளும் அரங்கேறின. போராட்டத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்திருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீஸார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர்.

ஜாக்டோ ஜியோ

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரயில் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னைக் கோட்டையை நோக்கிச் சென்றனர். அவர்களைக் கைது செய்வதற்காக ஒவ்வொரு டோல்கேட்டிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். தென்மாவட்டங்களிலிருந்து வருவோரைக் கைது செய்வதற்காகச் செங்கல்பட்டு அருகேயுள்ள டோல்கேட்டில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், அந்தப் பகுதி முழுவதுமே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

மாறுவேடங்களில் சிலர் சென்னைக்குச் செல்லக்கூடும் என்பதால், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் புதிய யுக்திகளைக் கையாண்டனர். தனியார் வாகனங்களில் செல்வோர் பேனர்கள் எதுவும் கட்டாமலும், கொடிகள் ஏதும் இல்லாமலும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோன்று திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து ஒன்றை போலீஸார் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பேருந்தில் வந்தவர்கள் சுற்றுலா செல்வதுபோல் லுங்கி கட்டிக் கொண்டும், தலைப்பாகை அணிந்து கொண்டும் இருந்தார்கள். பேருந்தில் இருந்த பெண்கள் நைட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்று காவல்துறை விழிபிதுங்கினார்கள். பின்பு பேருந்தில் உள்ளவர்களிடம் ஜாலியாக ஒரு விசாரணையை நடத்தினார்கள்.

``எங்க போறீங்க...?” எனக் காவல்துறையினர் கேட்க, ``நாங்க வண்டலூர் உயிரியர் பூங்காவுக்குச் செல்கிறோம். அதைப் பார்த்துவிட்டு மகாபலிபுரம் போகிறோம்” என கூலாகச் சொன்னார் லுங்கி கட்டியிருந்த ஒரு ஆசாமி. ஆனாலும் போலீஸார் விடவில்லை. ``அப்புறம் எங்கே போறீங்க?” என்றார் ஒரு காவலர். ``மெட்ராஸ் உள்ள போறோம்…அங்க நிறைய இடத்தைச் சுற்றிப் பார்க்க போறோம்.” என அசராமல் பதில் அளித்தார் அந்த நபர். ``சரி… ஆதார் கார்டு காட்டுங்க” என்றார் காவலர். 

``சுற்றுலாதானே போறோம்! அதெல்லாம் நாங்க ஏன் எடுத்து வரப்போறோம்?” எனப் பதில்வர, ஏமாற்றமடைந்த அந்தக் காவலர் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியை நோக்கி நகர்ந்தார். ``டீச்சர், நீங்க எங்க போறீங்க?” என்றதும் அந்தப் பெண் டீச்சர் என்பதை மறுக்காமல் “நாங்க மெட்ராஸுக்குப் போறோம்.” என்றார். ``போராட்டத்துக்குத் தானே போறீங்க… போய் வாங்க…” என்றார் காவலர். உடனே பூரிப்படைந்த அந்தப் பெண்மணி ``நாங்க உங்களுக்கும் சேர்த்துத்தான் போராடுறோம்!” என்றார். ``அப்ப எல்லோரும் வாங்க” என மொத்தமாக அனைவரையும் கீழே இறங்கச் சொன்னார், அந்தக் காவலர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜாக்டோ ஜியோ

அடுத்ததாக, ஆன்மிகச் சுற்றுலா செல்லும் பேருந்து ஒன்று மடக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் அந்தப் பேருந்தில் இருந்தார்கள். மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னைப் போராட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அந்தப் பேருந்தை மடக்கிய காவலர்கள், வழக்கம் போல தங்கள் பாணியிலேயே விசாரணை செய்தனர். முதலில் யாரும் சிக்குவதாக இல்லை. எதற்கெடுத்தாலும் ``ஓம் சக்தி" என்று பதில் அளிக்க ``திறுதிறு"-வென்று விழித்த காவல்துறையினர் அவர்களை விட்டுவிட்டார்கள்.

பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், செங்கல்பட்டு டோல்கேட் பகுதியிலேயே கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அதுபோல் வண்டலூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டை நோக்கிய முற்றுகைப் பேரணிக்காக வெளியூர்களிலிருந்து வந்தவர்களில் போலீஸார் கோட்டை விட்டது எத்தனை பேர் என்பது, முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்