`காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன!’ - கொதிக்கும் ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அவகாசத்துக்கு மேல் அவகாசம் என மத்திய அரசு இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகத் தேர்தலுக்குப் பின்னரே, வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளர் ஆஜராக உத்தவிட்டு, மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக ஆலோசிக்க தி.மு.க தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முக ஸ்டாலின்,``காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன. கைது செய்யப்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும். மே 14-ம் தேதி காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வரவில்லையென்றால் போராட்டங்கள் வெடிக்கும்" என்றார். 

முன்னதாக, கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, நீட் தேவையில்லை என்னும் தமிழக மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வேண்டும். நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர் இறப்புக்கு இரங்கல். கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை விடுதலை செய்து அவர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடந்த வேண்டும். மே 14-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும். அவ்வாறு அமைக்கவில்லையெனில், வருகிற மே 15-ம் தேதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!