காவிரிக்காக பிரதமர் மோடிக்கு கமல் அனுப்பிய வீடியோ! ஸ்ரீபிரியா தகவல்

காவிரி பிரச்சனை குறித்து கமல் பேசிய வீடியோ பதிவு ஒன்றைப்  பிரதமருக்கு அனுப்பி இருக்கிறோம். அதைப்  பார்த்த பிறகு பிரதமர் எங்களை நிச்சயம் அழைப்பார் என நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில உயர் நிலைக்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். அதில், ``காவிரி பிரச்னை குறித்து ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். எந்தப் போராட்டமாக இருந்தாலும் அறவழியில் நடைபெற வேண்டும் எனத்  தலைவர் கூறியுள்ளார். காவிரி பிரச்னையில் அடிக்கடி எங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். மேலும், காவிரி பிரச்னை தொடர்பாக தலைவர் கமல்ஹாசன் பேசிய விடியோ பதிவு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் நிச்சயம் பார்த்திருப்பார். மத்திய அரசின் செல்வாக்கில் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் கூடப்  பிரதமரை சந்திக்க முடியவில்லை. 

அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படிச்  சந்திக்க முடியும். வீடியோவை பார்த்து விட்டு பிரதர் அழைப்பார் என்று நம்புகிறோம். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி குறித்து பேசினோம். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் காவிரி பிரச்னை குறித்துத்தான் முழுமையாகப் பேசப்பட்டது. காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதன் பிறகு எங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்போம். 14-ம் தேதி நீண்ட தூரத்தில் இல்லை. கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதன் மூலம் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர். 

அடுத்தாக, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமியமே தேசியம் என்பதால், இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடமும் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்கச் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி இருக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை, வாக்கும் எங்கள் ரகசியம். எனவே அதைத் தெரிவிக்க மாட்டோம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கமல் பற்றிப்  பேசவே வேண்டாம்" எனப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!