காலிக் குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதுதொடர்பாக பல முறை காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

                                                                                  கடலூர்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் விமல்ராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில்  60  பேர் கலந்து கொண்டனர். பின்னர் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர்  அலுவலகத்தில் ஜமாபந்தி நடத்தும் அலுவலரும் முத்திரைத் தாள் தனி துணை ஆட்சியருமான ஜெயக்குமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் உடனடியாக குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். கீழ்ராதாம்பூர், ம.உடையூர், அழிஞ்சிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து ஜமாபந்தி அலுவலர் மாவட்ட ஆட்சியர் குடிநீர் பிரச்னைக்குத் தனி கவனம் செலுத்திவருவதால் விரைவில் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!