எடப்பாடி பழனி'சாமி' பேருக்கு இன்னோர் அர்ச்சனை! - ஹஹா வீடியோ

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்ற வசனத்தோடு புதிய விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. 

திரைத்துறை ஸ்ட்ரைக் முடிந்தபிறகு தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் சென்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் திரையரங்குகளில் முதல்வர் பழனிசாமிக்கு அர்ச்சனை செய்யச் சொல்வதுபோல் தமிழக அரசின் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழவே, அந்த விளம்பரத்தை உடனடியாக தியேட்டர்களிலிருந்து தூக்கினார்கள். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `முதல்வருக்குத் தெரியாமல் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது என்றும், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, அந்த விளம்பரம் தியேட்டர்களில் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டது' என்றார். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு வீடியோ வெளியானது. 

இந்நிலையில், எடப்பாடி பழனி `சாமி’க்கு அர்ச்சனை செய்யச் சொல்வது போல மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள அந்த வீடியோவில், மாற்றுத்திறனாளி ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு அர்ச்சனை செய்யச் சொல்வது போல் காட்சிகள் அமைந்துள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். ஏற்கெனவே வெளியான வீடியோவுக்குக் கடும் கண்டனங்கள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற வீடியோ வெளியாகி நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!