ஒரு அடிக்கும் மேல் வளர்ந்த வெண்டைக்காய்! சேலத்தில் ஆச்சர்யம் | ladies finger grown beyond one feet in salem

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/05/2018)

கடைசி தொடர்பு:23:30 (08/05/2018)

ஒரு அடிக்கும் மேல் வளர்ந்த வெண்டைக்காய்! சேலத்தில் ஆச்சர்யம்

சேலத்தில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் வீட்டில் வளர்க்கும் செடியில் வெண்டைக்காய் ஒரு அடிக்கும் மேல் வளர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

பொதுவாகவே ஒரு அடிக்கும் குறைவாகவே வளரக்கூடிய வெண்டைக்காய், சேலத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் வீட்டில் வளர்க்கும் செடியில் ஒரு அடியைத் தாண்டியும் வளர்ந்துள்ளது. அவர் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள், பொருட்களை பற்றிய விளக்கம் கேட்கிறார்களோ இல்லையோ,அவர் வளர்த்து வரும் வெண்டைக்காய் பற்றிய விளக்கத்தை கேட்காமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு வெண்டைக்காய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இதுகுறித்து வெண்டைச்செடியை வளர்த்துவரும் ரவிசங்கரிடம் பேசினோம்.''என்னுடைய பூர்வீகம் சென்னை. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். எங்க வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நானே உற்பத்தி செய்து கொள்ளுவேன். அதன் பிறகு கல்லூரி பிடித்து தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றினேன். குடும்ப சூழ்நிலையின் காரணமாக சேலம் இராமகிருஷ்ணா ரோடு பகுதியில் குடிவந்து விட்டோம். என் மனைவி பெயர் ரேவதி எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். நான் மளிகை கடை நடத்தி வருகிறேன். ரோட்டின் ஓரமாக 5-க்கும் மேற்பட்ட பழ வகை மரங்களை வளர்த்து வருவதோடு, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய தொட்டிகள், கேரி பேக் போன்றவற்றில் காய்கறி செடிகளை வளர்த்து வருகிறேன்.

காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரம் இந்த காய்கறி செடிகளோடு என்னுடைய உரையாடல் இருக்கும். அந்த செடிகளுக்கு தேவையான இயற்கை உரமான பன்றிக் கழிவுகள், கால்நடை சாணங்கள் மக்கிய குப்பைகளை மட்டுமே உரமாக போட்டு வளர்த்து வருவேன். தற்போது நான் வளர்த்து வரும் வெண்டைச் செடியில் வெண்டைக்காய் காய்த்திருக்கிறது. அது 1 அடி 5 அங்குலம் வரை ஒவ்வொரு வெண்டைக்காயும் நீண்டு வளர்ந்து இருப்பதால், அனைவரின் பார்வையும் என் வெண்டை செடி ஈர்த்திருக்கிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க