வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (09/05/2018)

கடைசி தொடர்பு:00:30 (09/05/2018)

உறவினர்களின் தொடர் அவமானத்தால் தீக்குளித்த பெண்! - காப்பாற்றச் சென்ற பாட்டியும் பலி

தீக்குளிப்பு

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபெமினா (25). இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காஜாமைதீன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. காஜாமைதீன் திருப்பூரில் இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்ததால், அங்கேயே ஒரு வீடு பார்த்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட, ஃபெமினா குழந்தையை தூக்கிக்கொண்டு, ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஃபெமினா மீது கரிசனம் காட்டிய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், காலப்போக்கில் வார்த்தைகளால் அவரைக் காயப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வார்த்தைகளைக் கடந்து வாழ்ந்து வந்திருக்கிறார் ஃபெமினா. 

இந்தநிலையில், நேற்று முன்தினம் கருங்கல்பாளையம், இந்திராநகரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு ஃபெமினா சென்றுள்ளார். அப்போது ஃபெமினாவுடைய பாட்டி மற்றும் உறவினர்கள், ‘இன்னும் எத்தனை காலத்துக்கு தான் பொறந்த வீட்டுலயே இருப்ப. ஒழுங்கா உன் புருஷன் கூட சேர்ந்து வாழப் பாரு’ என்று ஆரம்பித்து கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகளைக் கேட்டு மனமுடைந்த ஃபெமினா, வீட்டிலிருந்த  மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதனைப் பார்த்து பதறிப்போன ஃபெமினாவின் பாட்டி சபுரா, பேத்தியைக் காப்பாற்ற முயற்சி செய்ய, அவர் மீது தீ பற்றியிருக்கிறது. உடனடியாக உறவினர்கள் இருவரையும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்தநிலையில், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த ஃபெமினா மற்றும் அவருடைய பாட்டி சபுரா, சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தனர். ஃபெமினாவின் உயிரிழப்பிற்கு காரணமான கணவர், உறவினர்கள் என 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.