"சாதிப் பெயரை நெஞ்சில் குத்துவதா!" -காங்கிரஸ் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம்!

மத்திய பிரதேச அரசு காவலர் தேர்வில் கடைப்பிடித்த சாதிய பாகுபாட்டை கண்டித்து சேலம் மாநகர காங்கிரஸார் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 -க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்து கொண்டார்கள்.

இதுபற்றி சேலம் மாநகர காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ், ''கடந்த வாரம் மத்திய பிரதேச மாநில அரசு காவலர் தேர்வு நடத்தியது. அப்போது தேர்வுக்கு வந்திருந்த மாணவர்களின் நெஞ்சில் சாதி பெயரை ரவுண்ட் சீல் போலக் குத்தியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தியா என்ற மதச்சார்பின்மை கொண்ட நாட்டில் இப்படிச் சாதி அடையாளப்படுத்துவது இந்திய ஜனநாயக கோட்பாட்டிற்கே ஆபத்தானது.

சுதந்திரம் அடைந்த இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது போன்ற செயலைச் செய்யாத ஒரு படுபாதக செயலை மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு செய்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தலைகுனிவு ஏற்படுத்தியதோடு வெட்கக் கேடான சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறது. 1989 வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போக செய்ததோடு தற்போது வெளிப்படையாகச் சாதி பெயரை எழுத வைத்து இந்தியாவைச் சாதியத்திற்குள் அடைக்கப் பார்க்கிறார்கள்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மக்களைச் சிந்திக்க விடாமல் இது போன்ற வில்லங்க வேலைகள் ஏதாவது செய்து திசை திருப்பி வருகிறது. மக்கள் மத்திய பி.ஜே.பி., அரசின் மக்கள் விரோத செயல்களை நன்றாக தெரிந்து கொண்டார்கள். இனி மோடி தலைமையிலான பி.ஜே.பி., அரசு எந்த மாநிலத்திலும் தலை தூக்காது''  என்றார்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!