வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:05:38 (09/05/2018)

காஷ்மீரில் பலியான சென்னை இளைஞரின் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி!

பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற கலவரத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. 

திருமணி

சென்னை அடுத்த பட்டாபிராம் கரிமேடு பகுதியைச் சார்ந்தவர் ராஜவேல். இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு துறையில் ஆடியன்ஸ் டிப்போவில்  பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உடன் பணியாற்றி வரும் தனது நண்பர்கள் குடும்பத்தினருடன்  40 பேர் கடந்த 4 -ம் தேதி காஷ்மீர் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக நடைபெற்ற உள்ளூர்  கலவரத்தில் ஸ்ரீநகர்  நிர்மல் பிரிட்ஜ் குல்மார்க் ரோடு என்ற இடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது  ராஜவேல் அவர்களின் மகன் திருமணிசெல்வன்(25) தலையில்  கல்லடிப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் ஐ.டி துறையில் பணியாற்றி வந்தார்.  

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த திருமணிசெல்வனின் அப்பா ராஜவேலுவை காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் திருமணிசெல்வனின் உடலுடன் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை சென்னை வந்தனர். 

 திருமணி

திருமணிசெல்வன் உடலுக்கு அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் தமிழக முதல்வர் அறிவித்த ரூ 3 லட்சத்திற்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கினார்கள். 

காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்த திருமணிசெல்வன் உடலுக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர்  செய்தியாளர்களிடம்,  தமிழக அரசு அறிவித்த ரூ. 3 லட்சம் உதவித் தொகைக்கு பதிலாக ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் எனவும், உயிரிழந்த திருமணியின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் காஷ்மீர் பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். பின்னர் திருமணிசெல்வன் உடலுக்கு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.