வெளியிடப்பட்ட நேரம்: 02:14 (09/05/2018)

கடைசி தொடர்பு:07:30 (09/05/2018)

ஆதரவற்றோர் உதவித்தொகை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 2 மூதாட்டிகள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்,  ஆதரவற்றோருக்கான உதவித்தொகை வழங்காத அதிகாரிகளைக் கண்டித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக  2  மூதாட்டிகள் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மூதாட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள  ஊத்துபட்டி கிராமத்தைச்  சேர்ந்த செல்லையா என்பவரது மனைவி மூக்கம்மாள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா இறந்து விட்ட நிலையில்,  உறவினர்கள் யாரும் இல்லாததால் ஆதரவற்றோர் உதவித்தொகை  கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். 

இதனைத்  தொடர்ந்து கடந்த 2016 -ம் ஆண்டு மூக்கமாளுக்கு ஆதரவற்றோர்க்கான உதவித்  தொகை ரூ.1,000 வழங்கிட, தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. 

இதே போல, கிழவிபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மனைவி குருவம்மாள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,  முத்துராமலிங்கமும் இறந்து விட, குருவம்மாள் அரசு உதவித் தொகை கேட்டு  விண்ணப்பம் அளித்துள்ளார். இவருக்கும் ஆதரவற்றோருக்கான உதவித்  தொகை ரூ.1,000 வழங்க தாலுகா  அலுவலகத்தில் இருந்து ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை உதவித்  தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

மூதாட்டிகளின் தர்ணா

பலமுறை தாலுகா  அலுவலகத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால்,  மூக்கம்மாள் மற்றும் குருவம்மாள் ஆகிய இருவரும், ஆணை வழங்கப்பட்டும் 2 ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல்  அலைக்கழிப்பு செய்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்  கோரியும்,  உதவித்தொகையை  வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தாலுகா  அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதாட்டிகளுக்கு ஆதரவாக சி.பி.எம்.கட்சியினரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாலுகா  அலுவலகம் முன்பு தற்கொலை செய்யப்  போவதாகத் தெரிவித்தனர். "அடுத்த மாதத்தில் இருந்து தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படும்" என தாசில்தார் பரமசிவம் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க