வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:07:26 (09/05/2018)

’ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளுக்கு எங்க குடிநீரை கொடுக்கிறோம்’ கலெக்டரிடம் கலங்கிய மக்கள்

 குடிநீர்
 

"எங்க ஊர்ல குடிதண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுது. இதனால், பள்ளிக்கூடம் போற புள்ளைங்கதான் தண்ணி தூக்கப் போறாங்க. சொட்டுநீர்கூட குடிக்க கிடைக்காம தவிக்கிறோம்" என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் மக்கள் கண்ணீரோடு புகார் அளித்தனர்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது முள்ளிப்பாடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மக்கள், பள்ளி மாணவர்களை ஒரு கையில் அழைத்துக் கொண்டும், மறு கையில் காலிக் குடங்களோடும் கரூர் மாவட்ட கலெக்டரிடம் குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தார்கள்.

இதுகுறித்து அவர்கள், "எங்கள் ஊரில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்க ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றும் உள்ளது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். எங்கள் ஊரில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால், எங்கள் ஊர் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி போகும் மாணவ, மாணவிகளும் தண்ணீர் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தினசரி வேலைக்குச் செல்பவர்கள். வேலைக்குப் போய்தான் வயிற்றுப்பாட்டை பார்க்க வேண்டிய சூழல். அதனால், குடிநீர் சேகரிக்க பல கிலோமீட்டர் தூரத்துக்குப் பள்ளி, கல்லூரி போகும் எங்க பிள்ளைங்களைதான் தண்ணீர் தூக்க அனுப்புகிறோம்.

எங்க ஊருக்கு குடிநீர் கேட்டு கிராம ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தோம். 'இப்போது ஊராட்சியில் நிதி இல்லை. அதனால், ஒன்றும் செய்ய முடியாது' என்று கையை விரித்துவிட்டனர். இதனால், எங்க ஊரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமையல் செய்பவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் கழிவறைகளுக்குத் தேவையான தண்ணீரை மாணவ, மாணவிகளை எடுத்து வருமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், நாங்க குடிக்க வைத்திருக்கிற தண்ணீரை பள்ளிக்கு எடுத்துப் போகும் அவலமும் நடந்துச்சு. அதனால், குடிக்கத் தண்ணீரின்றி அவதியுறும் எங்கள் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே தீர்க்கணும்" என்றார்கள்.