வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (09/05/2018)

கடைசி தொடர்பு:09:00 (09/05/2018)

’175 லாரிகளில் தினமும் மணல் திருட்டு’ அதிரவைத்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினரின் புகார்!

 மணல் திருட்டுக்கு எதிராக புகார்

தினமும் 175 லாரிகள், 1,750 மாட்டு வண்டிகளில் காவிரி ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக கலெக்டரிடம் புகார் கொடுத்து அதிர வைத்திருக்கிறார்கள், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் மனு கொடுத்த அவர்களைச்  சந்தித்தோம். "கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி முதல் நெரூர் வரை தினமும் மணல் கொள்ளை நடக்கிறது. இரவு 8 மணி தொடங்கி அதிகாலை 4 மணி வரை ரெகுலராக 175 லாரிகள், 1,750 மாட்டு வண்டிகளில் தடையில்லாமல் மணல் கடத்தல் நடக்கிறது. இது சம்பந்தமாக, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே, இங்கே இயங்கிவந்த அரசு மணல் குவாரிக்காக கடம்பன்குறிச்சியிலிருந்து தோட்டக்குறிச்சி வரை  6 கிலோமீட்டர் நீளமும், 30 அடி ஆழமும் அள்ளியதன் விளைவாக இந்தப்  பகுதி நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப்  போய்விட்டது. அந்த நீரும் அதிக உவர்த்தன்மைகொண்ட நீராக  மாறிவிட்டது. 

இந்நிலையில், தமிழகத்தின் நீராதாரமாக உள்ள காவிரி ஆற்றின் கரையை அனுமதியின்றி உடைத்து நசை தோட்டக்குறிச்சி கிராமப் பகுதியில் 11 இடங்களில் இரவு நேரத்தில் பொக்லைன் மூலம் அரசு நடத்தும் குவாரி போல ஆளுங்கட்சியினர் சிலரால் மணல் கொள்ளை நடந்துவருகிறது. தோட்டக்குறிச்சி, கடம்பன்குறிச்சி மற்றும் நன்னியூர் கிராமங்களில் 150 இடங்களில் மணல் இருப்பு உள்ளது. இங்கே, சுமார் 3000 யூனிட் மணல் இருக்கும். மணல் இருப்பு இருக்கும் இடங்களெல்லாம் அரசு அதிகாரிகளுக்குத்  தெரியும். ஆனால், அவர்கள் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். இவ்வாறு மணல் கொள்ளை நடக்கிறது என்று அகிம்சை முறையில் போராடிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் 70 பேர் மீது, பொய் வழக்கு பதிவாகி நடந்துவருகிறது. ஆனால், மணலை இரவு, பகல் பாராமல் கடத்தும் மணல் கொள்ளையர்கள்மீது காவல்துறையும், வருவாய்த்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டு, காவிரி ஆற்றை மணல் கொள்ளையர்களிடமிருந்து காபந்து பண்ண உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்கள்.