வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (09/05/2018)

கடைசி தொடர்பு:08:20 (09/05/2018)

களைகட்டிய திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா - வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம்!

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் பல்வேறு  வேடமணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

திருச்செந்தூர் முத்தாரமன் கோயில்

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இதில், பக்தர்கள் விரதமிருந்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, பல்வேறு வேடம் அணிந்து கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள்.  இதேபோல, திருச்செந்தூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோயில் சித்திரைக் கொடை உற்சவ விழாவை முன்னிட்டும், ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் விரதமிருந்து பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்திவருவது நடைபெற்றுவருகிறது. 

சித்திரை மாத கடைசி செவ்வாய்க்கிழமையான நேற்று, இக்கோயிலில் கொடை உற்சவ விழா நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கால்நாட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வரும் கொடைவிழாவில், தினமும் முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருச்செந்தூர் முத்தாரமன் கோயில்அலங்கார பூஜைகள்  நடைபெற்று வந்தன.  கொடைவிழாவை முன்னிட்டு,  உச்சினிமாகாளி அம்பாள் திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் தலையில் தீர்த்தக்குடம், பால்குடங்களைத் தூக்கிக்கொண்டு, ஊர்வலமாக முத்தாரம்மன் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்பாளுக்கு பாலாபிஷேகம் மற்றும் விசேஷ அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

அதன்பின், முத்தாரம்மன் கோயிலில் இருந்து வெயிலுகாத்தம்மன் கோயிலுக்கும்  மற்றும் வடபத்திரகாளியம்மன் கோயிலுக்கும் குடை பிடிக்க, தட்டுகளில் நைவேத்யப் பிரசாதம் ஏந்தி, மேளதாளத்துடன் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, வெயிலுகாத்தம்மன் கோயிலில் இருந்து தாடத்தி அம்பாள் எழுந்தருளி, படையல் கஞ்சி தீபாராதனை ஆகியவை, முத்தாரம்மன் கோயிலுக்குக் கொண்டுசேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் முருகர், விநாயகர், அம்பாள், பத்ரகாளி, பாதாள காளி, கிருஷ்ணர், பரமசிவன் ஆகிய வேடம் அணிந்த பக்தர்கள் ஆரவாரத்துடனும் ஆக்ரோஷத்துடனும் நடனமாடியபடியே வந்தனர். தெருக்களில் ஒவ்வொரு வீட்டிலும் தர்மம் எடுத்துப் பெறப்பட்ட  காணிக்கைகள் மற்றும் அரிசி ஆகியவற்றை முத்தாரம்மன் கோயிலுக்கு அளித்தனர்.

இரவில், முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி ஊர் முழுவதும் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இரவில் புறப்பட்ட சப்பரம், இன்று (09.05.18) மாலையில்தான் திருக்கோயிலை அடையும். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் கொடை விழா நிறைவடைகிறது. கொடைவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இக்கோயில் கொடைவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க