வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:07:53 (09/05/2018)

திருச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திருச்சியில், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக, தமிழ்நாடு முடிதிருத்தம் மற்றும் முடியெடுக்கும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

கடந்த மாதம் 29-ம் தேதி, கடலூரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் ,தி.மு.க தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை ஒருமையில் பேசினார். மேலும், காவிரி பிரச்னையில் 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க என்ன செய்தது?. நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க தான். நீங்கள் என்ன செய்தீர்கள்?. நாங்கள்தான் செய்தோம். காவிரி நடுவர் மன்றம் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? அதை நீங்கள் சொன்னால், நாங்கள் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறோம்’’ என்று பேசியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த தி.முக-வினர், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தங்களது தொழிலை அமைச்சர் இழிவுப்படுத்தி விட்டதாகக் கூறி, தமிழ்நாடு முடிதிருத்தம் மற்றும் முடியெடுக்கும் தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவர்கள் சமூக இளைஞர் பேரியக்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க நிர்வாகிகளான ரெங்கராஜன், மதியழகன் ஆகியோர் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசுக்கும் அமைச்சருக்கும் எதிராக முழங்கியதுடன் அமைச்சர் சி.வி.சண்முகம், தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என்றும், தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்துவதுடன், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் எச்சரித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க