வெளியிடப்பட்ட நேரம்: 08:11 (09/05/2018)

கடைசி தொடர்பு:08:46 (09/05/2018)

கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வோம்..! விவசாயிகள் கூட்டமைப்பு ஆதங்கம்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, கடந்த 4-ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவித்தது. 
விவசாயிகள்
அதன்படி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளரும் இந்திய விவசாய சங்கங்களின் மாநிலத் தலைவருமான குருசாமி தலைமையில், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநிலத் தலைவர் விசுவநாதன், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்க மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, காவிரிப் பாசன விவசாய பாதுகாப்புச் சங்க நிர்வாகி தனபாலன், கடைமடைப் பாசன விவசாய பாதுகாப்புச் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, அகில இந்திய கரும்பு விவசாய சங்கத் தலைவர் விருத்தகிரி மற்றும் செல்வம் உள்பட, தமிழகம் முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், நேற்று காவிரி நீர்ப் பிரச்னையில், தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் கர்நாடக அரசும் பறிப்பதைக் கண்டித்து, திருச்சி அண்ணா சிலை அருகே, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். 
விவசாயிகள்
 காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், மழைக்காலத்திற்கு முன்பே ஏரிகள், தடுப்பணைகளைத் தூர்வாரி, மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனைச் செயல்படுத்தாது மேல்முறையீடு செய்திருப்பதை வாபஸ் பெற வேண்டும், மே 15-ம் தேதி, நாகப்பட்டினம் கடலில் இறங்கி தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
போராட்டத்தின்போதே, உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு தொடர்பான விசாரணை நடந்ததைக் கவனித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காவிரி வழக்கில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரி வழக்கை வரும் 14 –ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டது. இதை அறிந்த விவசாயிகள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழங்கினர். இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கு ஆதரவானது என்று கூறி திடீரென தலையில் பானையைக் கவிழ்த்துக்கொண்டு, காவிரி பாலம் நோக்கி பேரணியாகச் சென்றனர். 
அதையடுத்து, காவிரியின் நடுவே இறங்கி தாங்கள் சுமந்து வந்த பானைகளை காவிரி ஆற்றில் உடைத்து, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது, 'காவிரி மேலாண்மைவாரியம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமே... யானை பெரிதா? பானை பெரிதா?' என முழங்கினர். 
 
மேலும், வரும் மே 15-ம் தேதி, கடலில் இறங்கி தற்கொலை செய்துகொள்ளும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர். 
விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் செல்லமுத்து, ”உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நம்பிக்கை இழப்பைத் தந்துள்ளது. தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், காவிரி தொடர்பான வழக்கில் வஞ்சகம் செய்தால், மோசடி நடக்குமேயானால், யானை பெரியதா, பானை பெரியதா என மண்பானைகளை காவிரி ஆற்றங்கரையில் உடைத்துள்ளோம். இதற்குத் தீர்வுகாண முடியவில்லை எனில், உச்சகட்டப் போராட்டமாக, நாகப்பட்டினம் அருகே உள்ள கடற்கரையில் தற்கொலைசெய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க