வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (09/05/2018)

கடைசி தொடர்பு:10:50 (09/05/2018)

`உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தவும்' - புதுச்சேரி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

`உள்ளாட்சித் தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று புதுச்சேரி அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.

தேர்தல்

புதுச்சேரியில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த 2011-ம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திவந்தது மாநில அரசு. அதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியைச் சேர்ந்த பெருமாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, புதுச்சேரியைச் சேர்ந்த அனந்தலட்சுமி என்பவர், ”தொகுதி வரையறை மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்றவற்றை முறைப்படுத்திய பின்னரே, தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு, மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்து, தேர்தலை நடத்துமாறு தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். ஆனால், ``தொகுதி வரையறைகளை ஒழுங்குபடுத்திய பின்னரும் தேர்தல் நடத்தப்படவில்லை” என்று அனந்தலட்சுமி மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுக, “உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துங்கள்” என்று புதுச்சேரி அரசுக்கு  உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற புதுச்சேரி அரசு, “தொகுதிகள் வரைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கான ஒத்துழைப்பை மத்திய அரசு அளிக்கவில்லை” என்று மேல்முறையீடு செய்தது. இப்படியே மத்திய அரசுமீது புதுச்சேரி அரசும் புதுச்சேரி அரசின்மீது மத்திய அரசும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ``அரசியலமைப்புச் சட்டம் 243 வது பிரிவின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தபட வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, நகராட்சி மற்றும் ஊராட்சி வார்டு மறுவரையறைப் பணிகளை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். அந்தப் பணிகள் முடிந்த உடனேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், புதுச்சேரி அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க