`அண்ணன் இறந்தது எப்படி?’ - நடித்துக்காட்டச் சொன்ன போலீஸால் தம்பிக்கு நடந்த துயரம்

போலீஸாரின் அஜாக்கிரதையால் நாகையில் அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் இறந்தார்.

`அண்ணன் இறந்தது எப்படி?’ - நடித்துக்காட்டச் சொன்ன போலீஸால் தம்பிக்கு நடந்த துயரம்

போலீஸாரின் அஜாக்கிரதையால், அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் இறந்த சம்பவம் கிராம மக்களை வேதனையடைய வைத்துள்ளது. 

போலீஸ் அஜாக்கிரதையால் சகோதரர்கள் பலி

நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (37). இவரின் தம்பி ராஜூ (30). இருவரும் கொத்தனார் வேலைபார்த்துவந்தனர். கணேசனுக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன் திருமணமான ராஜுவின் மனைவி விஜயா, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். அண்ணணும் தம்பியும் அதீத பாசத்துடன் வாழ்ந்துவந்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, அருகிலுள்ள பாலக்குறிச்சியில் மனைவியுடன் ராஜூ வசித்தார். அவ்வப்போது, அண்ணனைப் பார்க்க  கீழ்வேளுர் வருவார். நேற்று காலை, அண்ணனைப் பார்க்க ராஜூ வந்தபோது, கணேசன் தன் வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டை ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கணேசனை மின்சாரம் தாக்கியது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கணேசன் இறந்துவிட்டார். 

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், 'கணேசனை மின்சாரம் தாக்கியது எப்படி?' என்பதுகுறித்து நடித்துக்காட்ட தம்பி ராஜூவிடம் கூறினர். ராஜூவும் அதேபோல நடித்துக்காட்ட, அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட ராஜூ, சம்பவ இடத்திலேயே பலியானார். நடித்துக் காட்டும்போது, மின் இணைப்பைத் துண்டித்துவிட வேண்டுமென்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத போலீஸாரை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கீழ்வேளுர் கிராமத்தில் சகோதர பாசத்துக்கு எடுத்துக்காட்டாக கணேசனும் அவரின் தம்பி ராஜூவும் வாழ்ந்துவந்ததாக கிராம மக்கள் கூறி கண் கலங்கினர். கணவர்களை இழந்த அவர்களின் மனைவிகள் அழுது துடிக்கின்றனர். கர்ப்பிணியாக உள்ள ராஜூவின் மனைவி கதறித் துடித்தது, பார்ப்போரைக் கலங்கவைத்தது. பலியான இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!