Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலியாக இருக்கும் 1,000 தலைமையாசிரியர் பணியிடங்கள்! மாணவர் சேர்க்கையில் பின்தங்கும் கிராமப்புற அரசுப் பள்ளிகள்

கிராமப்புற அரசுப்பள்ளிகள்

தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர் சேர்க்கையில்  கிராமப்புற அரசுப் பள்ளிகள் பின்தங்கியுள்ளன. " தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறைகாட்ட வேண்டும்" என்று அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

''தமிழக தொடக்கக் கல்வித்துறையில் உள்ள நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் 2018-19-ம் கல்வியாண்டில் கிராமப் புறங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்கள் பள்ளி திறக்கும் ஜூன் முதல் தேதி பணியில் சேர வேண்டும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதனால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

ஜூன் முதல் தேதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வருவார்கள். அல்லது வேறு ஊர்களில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று புதிய பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள். மேலும் கல்வித்துறை பல புள்ளி விவரங்களைக் கேட்கும். விலையில்லா பொருள்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிர்வாக வேலைகளை தலைமையாசிரியர்கள் பார்த்து வருகிறார்கள். கடந்த கல்வியாண்டில் (2017-18) முதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னர் ஏற்பட்ட தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. பொதுவாக இரண்டாவது கலந்தாய்வு நடைபெற்று, இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். சில தலைமையாசிரியர்கள் மரணம் அடைந்தோ அல்லது விருப்ப ஓய்வு கொடுத்தோ சென்றுள்ளார்கள். இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேல் காலியாக உள்ளது.

கிராமப்புற அரசுப்பள்ளிகள்

தற்போது ஏப்ரல் 30-ம் தேதியுடன் சுமார் 1,000 தலைமையாசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளியிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமையாசிரியர் இல்லாத நிலையில் ஒரு ஆசிரியர் இருந்து பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு முயற்சிகளை மேற்கொள்வது இயலாத காரியம். வரும் மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைக்கத்தான் அவர்களால் செய்ய இயலும். தலைமையாசிரியர் இருந்து ஆலோசனைகள் வழங்கி உடன் ஆசிரியர்களுடன் இணைந்துதான் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும். அரசு, தலைமையாசிரியர்களை நியமிக்காததை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. கல்வித்துறை இயக்குநர் இது விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை மே 31-ம் தேதிக்குள் நிரப்பி, புதிய தலைமையாசிரியர்கள் ஜூன் 1-ம் தேதி பள்ளி சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு என்பது 90 சதவிகிதம் இல்லாமலே போய்விட்டது. அதாவது ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து, கூடுதல் ஆசிரியர்கள் உள்ளார்கள். தற்போது காலியாக உள்ள ஒரு சில இடத்தில் கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவலில் பணி அமர்த்தினாலும், கூடுதலாகவே ஆசிரியர்கள் உள்ளார்கள். எனவே, இவர்களுக்கான பணியிட மாறுதலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவே. பணிநிரவல் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களே செய்து முடித்து விடுவார்கள். மொத்தத்தில் தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறைகாட்ட வேண்டும்" என்று கல்வி ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறை இதுவரை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பம்கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement