சீட்டுப்பணம் கட்டியவர்களைக் கலங்கடித்த நகைக்கடை உரிமையாளர்!

ஒருமாதமாக நகைக்கடையை அதன் உரிமையாளர் மூடிவிட்டுச் சென்றதால் கோடிக்கணக்கில் சீட்டுப்பணம் கட்டியவர்கள், குறிஞ்சி ஜூவல்லரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "காவல்துறையினர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகின்றனர். அவர்கள் நடவடிக்கையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை" என்று பணம் கட்டி ஏமாந்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டம், சங்குபேட்டை அருகே குறிஞ்சி ஜூவல்லரி-பர்னிச்சர் கடை உள்ளது. இந்தக் கடையின் உரிமையாளர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தங்கநகை சேமிப்புத் திட்டம் மற்றும் குலுக்கல் முறையில் பரிசுத் திட்டம் என்கிற பெயரில் சீட்டு நடத்தி வந்திருக்கிறார். இதில் பெரம்பலூர், அரியலூர், ஆத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்தத் தங்கநகை சேமிப்புத் திட்டத்திலும் குலுக்கல் முறையில் பரிசு திட்டத்திலும் சேர்ந்து வாரந்தோறும் மற்றும் மாதந்தோறும் பணம் கட்டி வந்தனர். 

இந்த நிலையில் திடீரென்று அந்தக் கடை கடந்த ஒரு மாதமாகத் திறக்கப்படவில்லை. இதனால் சீட்டுக்கட்டிய மக்கள் அந்தக் கடையின் உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. இதனால் பொதுமக்கள், தாங்கள் கட்டிய சீட்டுப்பணத்தை உரிமையாளர் மோசடி செய்துவிட்டதாக நினைத்தனர். இதனிடையே, அந்தக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சீட்டுக்கட்டிய பொதுமக்கள் கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். அப்போது கடையில் இருந்த உரிமையாளரிடம், கட்டிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்பதால் கட்டிய பணத்தை ஏமாற்றிவிட்டதாகக் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, கடையின் உரிமையாளர், பொதுமக்களிடம் வசூலித்த பணத்துக்கு தங்க நகைகளாகவும், பர்னிச்சர் பொருள்களாகவும் அல்லது பணமாகவும் விரைவில் கொடுத்து விடுவதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதோடு, "போலீஸார்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று எச்சரித்திருக்கிறார்கள். 

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் சிறப்பு தங்கநகை சேமிப்புத் திட்டம் என்கிற பெயரில் மாதந்தோறும் ரூ.300 வீதம் பொதுமக்களிடம் வசூலித்து 12 மாதங்கள் கழித்து அவர்களுக்கு இனிப்பு, காரம் மற்றும் பரிசு பொருள்கள், கட்டிய பணத்தைவிட கூடுதலாக பணம் செலுத்தினால் நகைகள் கொடுக்கப்படும் என்று ஆசைகாட்டினர். குலுக்கல் முறையில் பரிசு திட்டம் என்கிற பெயரில் ஓராண்டுக்கு பணம் செலுத்தினால், தவணை காலம் முடியும்போது அவர்களுக்கு பர்னிச்சர் பொருள்கள் கொடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!