வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (09/05/2018)

கடைசி தொடர்பு:12:45 (09/05/2018)

திருட்டில் பொன் விழா... 224 வழக்குகள் - சில்வர் சீனிவாசனின் சீக்ரெட் கதை

சில்வர் சீனிவாசன்

சென்னை மயிலாப்பூரில் சிக்கிய சில்வர் சீனிவாசனின் திருட்டுக் கதையைக் கேட்ட போலீஸார் வாயடைத்துப்போய் உள்ளனர். 

 யார் இந்த சில்வர் சீனிவாசன்?

சீனிவாசனின் சொந்த ஊர், ஆந்திர மாநிலம் நெல்லுார், மூலப்பேட்டை. ஐந்து வயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டதால் ஹோட்டல் வேலைக்குச் சென்றார். அதில் கிடைத்த வருமானத்தில் வாழ்ந்தார். அவருடன் வேலைபார்த்த சக ஊழியர் ஒருவருக்கு ஜாதகம் பார்க்கத் தெரியும். அவர் மூலம் ஜாதகம் பார்க்க கற்றுக் கொண்டார். பிறகு சீனிவாசன், ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு ஜோதிடம் பார்க்கத் தொடங்கினார். அங்குதான் அவரது வாழ்க்கையும் தடம் மாறியது.

கடந்த 1964ல் நெல்லூரில் உள்ள வி.வி.ஐ.பி ஒருவரின் மகனுக்கு திருமணம் தள்ளிப்போனது. அதற்கு என்ன காரணம் என்று சீனிவாசனிடம் அந்த வி.வி.ஐ.பி கேட்டுள்ளார். அப்போது, சீனிவாசனுக்கு 34 வயது. வி.வி.ஐ.பி மகனின் ஜாதகத்தை அலசி ஆராய நெல்லூருக்குச் சென்றார். அங்கு, சீனிவாசனுக்கு ராஜ உபசரிப்பு கிடைத்தது. அந்த வீட்டின் பூஜை அறையில் வெள்ளிப் பொருள்கள் இருந்தன. அதைப் பார்த்ததும் சீனிவாசனின் மனம் மாறியது.  அதை திருடிவிட்டு நைசாக எஸ்கேப் ஆனார். இதுதான் அவரது முதல் திருட்டு. ஆனால், புகார் கொடுக்காததால் அவர்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. 

திருமணத் தடைகள்

அதைத் தொடர்ந்து, திருமணத் தடைகளை நீக்க ஜோதிடம் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம் சீனிவாசன் கைவரிசை காட்டத் தொடங்கினார். சென்னை  நங்கநல்லூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் தங்கி ஜாதகம் பார்த்துவந்துள்ளார். செல்லும் இடங்களில் எல்லாம் ஜோதிடம் பார்ப்பதோடு, திருட்டிலும் ஈடுபட்டார்.  இதுதொடர்பாகப் பல புகார்கள் சென்னை காவல் நிலையங்களின் கதவுகளைத் தட்டின. பூஜைப் பொருள்களைத் திருடும் சீனிவாசனுக்கு போலீஸார் வலை விரித்தனர். மடிப்பாக்கம் பகுதியில் பூஜைப் பொருள்கள் திருட்டு தொடர்பான புகாரில்தான் முதலில் சீனிவாசன் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற பிறகு, அந்த வாழ்க்கையும் பழகிவிட்டதாம். 

 50 ஆண்டுகளாக...

34 வயதில் திருடத் தொடங்கிய சீனிவாசனுக்கு தற்போது 84 வயது. கடந்த 50 ஆண்டுகளாக திருட்டுத் தொழிலில் அவர் ஈடுபட்டுவருகிறார். இதனால் சீனிவாசனை பொன்விழா நாயகனாகவே போலீஸார் கருதுகின்றனர். காவல்துறை அதிகாரி வால்டர் தேவராம் பணியாற்றிய காலத்தில்தான் சீனிவாசன் மீது தொடர்ந்து திருட்டு வழக்குகள் பதிவாகின. அப்போது, வெள்ளி பூஜைப் பொருள்களை மட்டுமே சீனிவாசன் திருடியதால், 'சில்வர்' சீனிவாசன் என்று காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. சீனிவாசன் மீது 224 வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது, அதிகாரபூர்வ தகவல் இல்லை என்கின்றனர் போலீஸார். ஏனெனில், அவர் கைவரிசை காட்டிய பல இடங்களிலிருந்து காவல்துறைக்கு புகார்கள் வரவில்லை. ஆனால், திருடிய இடங்கள், பொருள்கள்குறித்த விவரங்களை சீனிவாசன், தன்னுடைய டைரியில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில்தான் 224 இடங்களில் சீனிவாசன் கைவரிசை காட்டியிருக்கிறார் என்று போலீஸார் சொல்கின்றனர். 

 டைரி சொல்லும் உண்மைகள்! 

சீனிவாசன், சிறுவயதில் கும்பகோணத்தில்தான் வாழ்ந்துள்ளார். அங்கு, ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்க வசதியில்லை. இதனால் வேலை தேடி பல இடங்களுக்குச் சென்றுள்ளார். டைரி எழுதும் பழக்கம் உடைய அவர், தன்னுடைய வாழ்நாளில் நடந்த முக்கிய சம்பவங்களை டைரியில் குறிப்பிட்டுள்ளார். அதில் திருட்டு விவரங்களும் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில், மயிலாப்பூரில் குடியிருக்கும் ராஜகோபாலன் என்பவர் வீட்டில் நான்கு சவரன் நகைகளை சீனிவாசன் திருடியுள்ளார். அதுதொடர்பான புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், விசாரணை நடத்தி, சில்வர் சீனிவாசனைக் கைதுசெய்துள்ளார். இந்த வழக்கு துப்பு துலங்க முக்கிய தடயமாக சி.சி.டி.வி கேமரா பதிவு இருந்துள்ளது. அதில், சில்வர் சீனிவாசன், ராஜகோபாலன் வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

வித்தியாசமான திருடர் 

சீனிவாசன் மீது சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட, அந்த வழக்கில் சிக்கிய அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில், சீனிவாசன் திருடிய நகைகளுக்கும் புகாரில் குறிப்பிடப்பட்ட நகையின் எடைக்கும் வித்தியாசம் இருந்தது. இதனால், சீனிவாசன்தான் பொய் சொல்கிறார் என்று கருதிய போலீஸார், தங்களது பாணியில் விசாரித்துள்ளனர்.  அப்போது, புகார் கொடுத்தவர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, புகாரில் நகையின் எடையைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார். சீனிவாசன் தெரிவித்த நகைதான் தன்னுடைய வீட்டில் திருட்டுப்போனது என்றும் தெரிவித்துள்ளார். திருடர்களில் இவர் வித்தியாசமானவர் என்று போலீஸார் தெரிவித்தனர். 

 நகைகளை விற்பது எப்படி? 

சீனிவாசன், திருடிய நகைகளை விற்பதிலும் கில்லாடி. பத்து சவரனுக்குக் குறைவாகத்தான் எல்லா இடங்களிலும் திருடுவார். சமீபத்தில், சென்னையில் உள்ள ஒருவரது வீட்டுக்குச் சென்ற சீனிவாசன் முன்பாக  50 சவரன் நகைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.  அதில், நான்கு சவரன் நகைகளை மட்டுமே திருடிய அவர், அதை சென்னையில் உள்ள நகைக் கடைக்குக் கொண்டுசென்றுள்ளார். அப்போது, தன்னுடைய மகளின் திருமணச் செலவுக்காக நகைகளை விற்பதாகத் தெரிவித்துள்ளார். அதை நம்பிய நகைக்கடைக்காரரும் பணத்தைக் கொடுத்துள்ளார். இப்படித்தான், திருடிய நகைகளை குடும்ப சூழ்நிலையைச் சொல்லி, விற்றதாக போலீஸாரிடம் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

 நன்கொடை கொடுத்த சீனிவாசன்

தன்னுடைய செலவுக்குப் போக மீதியுள்ள பணத்தை, அநாதை இல்லத்துக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அதற்கான ரசீதையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மூத்த குடிமகனாக இவர், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பார். ரயிலில் இருந்து இறங்கியதும், கால்போன போக்கில் நடந்து செல்வார். இவரது வயதான தோற்றத்தைப் பார்த்து பலர் இரக்கப்பட்டு உணவு கொடுப்பதுண்டு. அதையே தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி, மற்றவர்களை மூளைச்சலவைச் செய்வதில் இவருக்கு நிகர் இவரே. குறிப்பாக, பெண்களிடம் தோஷம் என்று கூறி நகைகள், பூஜைப் பொருள்களைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதுதான்  சில்வர் சீனிவாசனின் ஸ்பெஷல் என்கின்றனர் போலீஸார். 

சிறையிலும் ஆரூடம்

சில்வர் சீனிவாசன் மீது தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் வழக்குகள் உள்ளன. இதனால், ஆந்திர மாநில போலீஸாரும் சில்வர் சீனிவாசனைத் தேடிவருகின்றனர். தமிழகத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீட்டில் மட்டும்தான் திருடுவதை வாடிக்கையாக  வைத்துள்ளார். அதற்கேற்ப தன்னுடைய நடை உடையை மாற்றிக்கொள்வார்.  இந்தச் சூழ்நிலையில், சென்னையில் எங்கு பூஜைப் பொருள்கள் திருடப்பட்டாலும், சில்வர் சீனிவாசனைத்தான் போலீஸார் முதலில் தேடுவார்கள். இரண்டு மாநிலங்களில் திருட்டுத் தொழிலில் கொடிகட்டிப்பறந்த சில்வர் சீனிவாசன், இப்போது சிறைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு ஜோதிடம் பார்த்து, ஆரூடம் சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம் சில்வர் சீனிவாசன்.