"இவ்ளோ பிரச்னைல இருக்கும்போது ஜெயலலிதா நினைவு மண்டபம் முக்கியமா?!" ’மதுரை’ நந்தினி

நந்தினி - ஜெயலலிதா

"மெரினா கடற்கரையில இறங்கவே விடல போலீஸார்" எனக் கோபத்துடன் பேசத் தொடங்கினார் மதுரையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நந்தினி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. நினைவு மண்டபம்  50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. ஃபீனிக்ஸ் பறவை போன்ற வடிவத்தில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவிடத்தின் மாதிரிப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 7 -ம் தேதி (திங்கள் கிழமை), மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதி இருக்கும் இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும்  நடத்தினர். இதை எதிர்த்து அங்குப் போராட வந்தார் மதுரை நந்தினி. அது குறித்து அவரிடம் பேசினோம். 

மதுரை நந்தினி

(கோப்புப் படம்)

"நீட் தேர்வை சரியாக எழுத முடியல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியல, டாஸ்மாக்கால் தொந்தரவுகள் அதிகரிக்குது.... இப்படி தமிழகமே பிரச்னையில இருக்கும்போது இந்த நினைவு மண்டபம் அவ்வளவு முக்கியமா? இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில சுத்தமா ஆதரவை இழந்துடுச்சு. பிரதமர் மோடி சொல்றதைக் கேட்டுட்டு தலையாட்டிட்டு இருக்காங்க. மக்களோட வரிப்பணத்தை மொத்தமா காலிப் பண்ணிட்டு இருக்காங்க. இவங்களால எந்த நல்ல விஷயங்களும் நடக்கப்போறது இல்ல. நான் தொடர்ந்து போராடிட்டு இருக்கிறது டாஸ்மாக்கை எதிர்த்து. அதையும் இந்த அரசு ஒருபோதும் செய்ய மாட்டாங்க. 

நீட் தேர்வு எழுதப்போன கஸ்தூரி மகாலிங்கத்தின் அப்பா கிருஷ்ணமூர்த்தி இறந்து, அவரோட உடல் வந்துட்டு இருக்கும்போது கழுத்துல மாலையைப் போட்டுகிட்டு பூஜை பண்ணணுமா? இதைக் கண்டிச்சுப் போராட்டம் செய்ய நானும் அப்பாவும் சென்னைக்கு வந்தோம். அப்பா பஸ்லேருந்து இறங்கிட்டாங்க. ஆனா, நான் இறங்குவதற்குள் போஸீஸ் வந்து கைது செய்துடுச்சு. அந்த பஸ்லேயே எல்.ஐ.ஸி பஸ் ஸ்டாப்க்குக் கூட்டிட்டு வந்து, அங்கேருந்து ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போனாங்க. 'பப்ளிஸிட்டிக்காக பண்றியா... அப்படி, இப்படினு ஏராளமான கேள்விகளைக் கேட்டுட்டே இருந்தாங்க. நான் தொடர்ந்து போராடிட்டு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாதா என்ன... சும்மா மன உளைச்சலைத் தரணும்னு கேள்வியா கேட்டுட்டு இருந்தாங்க. 

ஜெயலலிதா நினைவு மண்டபம்

அப்பாவை கைது செய்து எங்க அழைச்சுட்டுப் போனாங்கனு தெரியல. என்கிட்ட போன் இல்ல. அப்பா எங்கே இருக்காங்கனு போலீஸ்கிட்ட கேட்டுட்டே இருந்தேன். போஸீஸ்காரங்க எந்தப் பதிலும் சொல்லல. சாயந்தரம் அப்பாவை அழைச்சிட்டு வந்து, நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல விட்டாங்க. 

ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலையே படமா இருக்கிறதுக்குக் காரணம் தேர்தல்ல எலெக்ட்ரானிக் ஓட்டு மிஷின் மூலமாக தந்திரம் பண்ணி மீண்டும் ஆட்சிக்கு வந்திடலாம் என்கிற எண்ணம்தான். அதனால என்னோட அடுத்த திட்டமே எலெக்ட்ரானிக் ஓட்டு மிஷினில் நடக்கும் தில்லுமுல்லுகளை பொதுமக்கள்கிட்ட கொண்டுசேர்ப்பதுதான்" என்கிறார். 

மதுரை நந்தினி தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வருபவர். எந்தக் கட்சி மற்றும் அமைப்பையும் சாராமல் தனிநபராக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருபவர். இதற்காக இவர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனபோதும் குடியால் ஏற்படும் தொல்லைகள் குறித்து மக்கள் மத்தியில் செய்யும் பிரசாரத்தை மேற்கொள்வதைக் குறைத்துக்கொள்வதே இல்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!