வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (09/05/2018)

கடைசி தொடர்பு:13:45 (09/05/2018)

கே.ஆர்.பி அணையில் இருந்து வீணான 10 டி.எம்.சி தண்ணீர்! முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் அய்யாக்கண்ணு

உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகும் தண்ணீர் விடமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தால், விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு உருவாகும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு ஒரு மடங்கு விவசாய உற்பத்தியை 5 மடங்கு உற்பத்தி செய்வது இயற்கை விவசாயத்துக்கு எதிரானது. இதைத் தொடர்ந்து உணவாகப் பயன்படுத்தி வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஆண்மை இழப்பும் பெண்களுக்குக் கருத்தரிப்பு இழப்பும் ஏற்படும். இதுகுறித்து பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்த கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 100 நாள்கள் கோட்டையை நோக்கிய பயணத்தில் இன்று கிருஷ்ணகிரி வந்தடைந்தார் அய்யாகண்ணு. 

கேஆர்பி அணையில் அய்யாகண்ணு

காவேரிப்பட்டிணத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்பு உணர்வு நோட்டீஸ் வழங்கிய அய்யாக்கண்ணு, மா விவசாயிகள் மற்றும் மாகூழ் உற்பத்தி நிறுவன முதலாளிகளைச் சந்தித்து மா கொள்முதல் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து கேட்டு அறிந்தார். பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி அணையைப் பார்வையிட்டு செய்தியார்களிடம் பேசினார். ''ஒரு பக்கம் தண்ணீர் கேட்டு போராடி வருகிறோம். ஆனால், கே.ஆர்.பி அணைக்குத் தண்ணீர் வருகின்றது. அணையில் தண்ணீர் இருக்கின்றது. ஆனால், கே.ஆர்.பி அணையில் 52 அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணா திறந்துவிட்டு இருக்கிறோம். 8 ஷட்டர்களில் முதலாவது ஷட்டர் உடைந்து இதுவரை 10 டி.எம்.சி தண்ணீர் வரை வெளியேறியுள்ளது. முதலாவது ஷட்டரை இன்னும் முழுமையாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் தற்போது 40 அடி தண்ணீர் மட்டும் தேக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 அடி அளவுக்கு தண்ணீரை தேக்கி நிறுத்த முடியவில்லை. இது இனியும் தொடர கூடாது. ஷட்டர்களை மாற்றி அமைக்க வேண்டும். கே.ஆர்.பி அணையில் 52 அடி தண்ணீரை தேக்கி நிறுத்த தமிழக முதல்வரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைப்பேன். முதல்வரும் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால் கே.ஆர்.பி அணைக்காகப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

மேலும், ``தென்பெண்ணை ஆற்றில் ஆழியாலாம் என்ற இடத்தில் இருந்து தூள்செட்டி ஏரிக்குக் கால்வாய் அமைத்தால் தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செழிக்கும். அரசு அதற்கான வரைவு திட்டத்தை தயார் செய்துள்ளதாகத் தகவல் அறிகிறேன். எனவே, அதற்குத் தேவையான 276 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். அதேபோல எண்ணேகோள்பதூர் திட்டம் அதை அரசு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள்'' என்று கூறினார்.