பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி மறைவு; தமிழறிஞர்கள் அஞ்சலி

பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞராக அறியப்பட்ட டாக்டர் அறிவொளி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

அறிவொளி

கடந்த 1936-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் அறிவொளி. கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பிறகு  அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றியவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், பூம்புகார் கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிந்தார். பணிக்குப் பிறகு திருச்சியில் குடிபெயர்ந்த அறிவொளி, வித்துவான் மற்றும் எம்.ஏ தமிழ் படித்திருந்தவர், இலக்கியக் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அடுத்து, பட்டிமன்றங்களில் பட்டையைக் கிளப்பினார். காரைக்குடி கம்பன் கழகத்தின்மூலம் தமிழுக்கு முக்கியப் பங்காற்றினார். குன்றக்குடி அடிகளார், அ.ச.ஞானசம்பந்தம் போன்ற புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களுடன் பேசி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.  மேலும், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் படைப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்களில் பேசியவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற நடுவராக விளங்கினார். 1986-ம் ஆண்டு, முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர். இவரது திறமையைப் பாராட்டி ஆய்வுரை திலகர், கபிலவாணர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.  சமீபத்தில், வாழ்நாள் சாதனை விருது பெற்றார்.

அறிவொளி

இவரின் பேச்சுத் தமிழுக்கு தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, பாரிஸ், குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உண்டு. இலக்கிய மேடைகள் மட்டுமல்லாது, சினிமா, டி.வி சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழிலில் பேசவது மட்டுமல்லாது தமிழில் எழுதுவதிலும் வல்லவரான  இவர், சுமார்        120-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1974-ம் ஆண்டு, 'பாரதிதாசனின் புதிய பார்வை' என்ற தலைப்பில் முதல் நூலை எழுதினார். சமீபத்தில் எழுதப்பட்ட 103-வது நூலின் பெயர், 'யோகக் களஞ்சியம்', 'சிவபுராணம் அனுபவ விளக்கம்' என்ற நூலும், கம்பராமாயணம் முழுவதையும் நாவல் வடிவில் ஆயிரத்து 200 பக்கங்களில் எழுதியுள்ளார்.

மேலும், மருத்துவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக சித்த வைத்தியம், அக்குபஞ்சா் போன்ற மருத்துவப் படிப்புகளையும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து முடித்துள்ளார். அக்குபஞ்சர் படிப்பில் டென்மார்க்கில் உள்ள பல்கலைகழகத்தில் பிஹெச்.டி முடித்துள்ளார். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தைக் கூறிய இவர், புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறி பிரபலமடைந்தார்.  பட்டிமன்றப் பேச்சாளர் மட்டுமல்லாமல், இயற்கை வைத்திய முறையில் மக்களுக்கு சிகிச்சையும் அளித்துவந்தார்.  இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த  அறிவொளி, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அனிபா காலனியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, பல்வேறு தமிழ் அறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலிசெலுத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!