நிர்மலாதேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

நிர்மலா தேவிக்கு, வருகிற 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நிர்மலாதேவி

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான வழியில் இழுக்க முயன்றார் என்ற வழக்கில் அவரும், அவருக்கு உதவியதாக உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நிர்மலாதேவிக்கு நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், மதுரை சிறையிலிருந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்காக யாரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்துவரும் சி.பி சி.ஐ.டி-யும் கஸ்டடி கேட்கவில்லை. அவருக்கு, வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. அவர், மீண்டும் மதுரை சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த முறையும் அவரை யாரிடமும் பேசிவிடாத வகையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே, அருப்புக்கோட்டையிலுள்ள நிர்மலா தேவியின் வீட்டை உடைத்துத் திருட்டு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, காவல்துறை விசாரித்துவருகிறது. நிர்மலா தேவியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை யாரும் திருட முயன்றுள்ளார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளதால், நிர்மலா தேவி விவகாரம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!