வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (09/05/2018)

கடைசி தொடர்பு:14:16 (09/05/2018)

26 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி... அடுத்த நெடுவாசலா திண்டுக்கல்?

‘‘இந்த இடத்துல வெளியூரைச் சேர்ந்தவங்க போர் போடுறாங்கனு தகவல் கிடைச்சது. இங்க வந்து பார்த்தா குஜராத் நம்பர் பிளேட் உள்ள லாரி மூலமா போர்வெல் அமைச்சிட்டு இருந்தாங்க. ஏன் இங்க போர்வெல் அமைக்கிறீங்கனு கேட்டோம்.

26 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி... அடுத்த நெடுவாசலா திண்டுக்கல்?

திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் நீர்வளத்துறை மூலமாக 26 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு தினங்களுக்கு முன்பாக பட்டிவீரன்பட்டி அருகே ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாவட்டத்தில் பல இடங்களில் இதுபோன்று ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா, நெடுவாசல் போன்று இந்தப் பகுதியிலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க இருப்பதாகவும், அதற்கான சோதனை தற்போது நடந்து வருவதாகவும் மக்களிடையே வதந்தி பரவி வருவதால் திண்டுக்கல் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளார்கள். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும் இதுவரை தெளிவான விளக்கம் அளிக்காதது பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது. 

திண்டுக்கல் 

பட்டிவீரன்பட்டி அருகே ஆழ்துளைக் கிணறு அமைப்பதைத் தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சியினரிடம் பேசினோம். ‘‘இந்த இடத்துல வெளியூரைச் சேர்ந்தவங்க போர் போடுறாங்கனு தகவல் கிடைச்சது. இங்க வந்து பார்த்தா குஜராத் நம்பர் பிளேட் உள்ள லாரி மூலமா போர்வெல் அமைச்சிட்டு இருந்தாங்க. ஏன் இங்க போர்வெல் அமைக்கிறீங்கனு கேட்டோம். யாருக்கும் பதில் சொல்லத் தெரியலை. அவங்க இந்தியில சொன்னதுல, சென்ட்ரல் கவர்மெண்ட்ங்குற வார்த்தைதான் புரிஞ்சது. போர் போடுறதுதான் எங்க வேலை. எதுக்காக போடுறோம்னு தெரியாதுனு சொல்லிட்டாங்க. உடனே பஞ்சாயத்து ஆபீஸ்ல போய் கேட்டோம். அவங்களும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுதான் எங்களுக்கு சந்தேகம் ஆகிடுச்சு’’ என்றனர்.

திடீரென திண்டுக்கல் மாவட்டத்தில் 26 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய மாநில நிலத்தடி நீர் ஆதாரத்துறையைச் சேர்ந்த ஒரு பொறியாளர், ‘‘மத்திய நிலத்தடி நீர் ஆதாரத்துறை மூலமாக இந்த ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் எந்தெந்த இடத்தில் எத்தனை அடியில் முதல் ஊற்று உள்ளது, எத்தனை அடியில் தண்ணீர் இருக்கிறது என்பது தொடர்பான சோதனை நடந்து வருகிறது. இது தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறுகிறது. வெட் லேண்ட் பகுதிக்கு விழுப்புரத்திலும், டிரை லேண்ட் பகுதிக்காக திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்தச் சோதனை நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 29 இடங்களில் ஆழ்துளைக் குழாய்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் 26 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று இடங்களில் அமைத்தால் இந்தச் சோதனை முடிவு பெறும். இது, மக்கள் நினைப்பதுபோல் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு இல்லை. மீத்தேன் வாயு மேட்டுப்பாங்கான பகுதியில் கிடைக்காது என்பதுதான் அறிவியல். நல்ல தண்ணீர் வளமுள்ள, ஆற்றுப் படுகைகளில் தான் மீத்தேன் கிடைக்கும். எனவே, அறிவியல் ரீதியாக இது மீத்தேன் எடுப்பதற்கான சோதனை இல்லை என்பதை சாதாரண மக்களும் புரிந்துகொள்ள முடியும். 

தற்போது நடைபெற்று வரும் சோதனை, அக்குபர் மேப்பிங் தயாரிப்பதற்கான சோதனை. இதில் மத்திய நிலத்தடி நீர் ஆதாரத்துறையைச் சேர்ந்த மூத்த பொறியாளர் குமரேசன் ஈடுபட்டுள்ளார். இந்தச் சோதனை 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் இந்த ஆய்வுக்கு போர்வெல் அமைக்கும் ஒப்பந்தத்தை குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. அதில் பணியாற்றுபவர்கள் அனைவரும் இந்தி பேசுபவர்கள். பட்டிவீரன்பட்டி பகுதியில் இந்தக் குழுவினர் போர்வெல் அமைத்து ஆய்வில் ஈடுபடும்போது அங்கு வந்த சிலர், எதற்காக போர்வெல் அமைக்கிறீர்கள் எனக் கேட்கவும், அங்கிருந்த பணியாளர்கள் ஏதோ இந்தியில் சொல்லியிருக்கிறார்கள். மொழி பிரச்னை காரணமாக இரு தரப்பும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால், ஏதோ உள்நோக்கத்துடன் தான் போர்வெல் அமைக்கிறார்கள். மீத்தேன் எடுப்பதற்காகத்தான் அமைக்கிறார்கள் என பயத்தில் பீதியைக் கிளப்பி விட்டார்கள். இது எதற்காக அமைக்கப்படுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியிருந்தால் இத்தனை குழப்பம் இருந்திருக்காது. 

அக்குபர் மேப்பிங் என்பது நிலத்தடியில் உள்ள நீராதாரத்தை நீள்வெட்டுத் தோற்றத்தில் பார்ப்பது. மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஒன்றியங்களிலும் குறிப்பிட்ட இடத்தில் போர்வெல் அமைத்து, நிலத்தடி நீர் உள்ள ஆழத்தைத் துல்லியமாக கணக்கிடுவதற்கு இந்த மேப் உதவும். இதன் மூலமாக எதிர்காலத்தில் தேவையில்லாமல் அதிக ஆழத்துக்கு போர்வெல் போடுவதைத் தவிர்க்கலாம். தற்போதுகூட குடிநீர்த் திட்டத்துக்காக மாவட்ட நிர்வாகம் ஒரு இடத்தில் போர்வெல் அமைத்தது. 160 மீட்டர் ஆழம் வரை போர்வெல் அமைத்தவர்கள் தண்ணீர் இல்லை என அத்துடன் நிறுத்தி விட்டார்கள். ஆனால், அந்த இடத்தில் 190 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது. இன்னும் முப்பது மீட்டர் ஆழம் போயிருந்தால் தண்ணீர் எடுத்திருக்கலாம். இது தெரியாததால் பணம் வீணாவதுடன், தண்ணீரும் கிடைக்காமல் போகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகதான் அக்குபர் மேப் தேவைப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இது தயாரிக்கப்பட்டவுடன் அதை முன்மாதியாக வைத்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வை மேற்கொள்ளும் திட்டம் இருந்தது. ஆனால், இதை மக்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் மீத்தேன் எடுப்பதாக நினைத்து போர்வெல் போடுவதை தடுத்துவிட்டார்கள். அதனால் மேப் தயாரிப்பது இயலாமல் போய்விட்டது. இது முழுக்க முழுக்க நிலத்தடி நீரின் அளவைத் துல்லியமாக கண்டறிவதற்கான ஆய்வுதான். வீண் வதந்திகளால் நல்ல திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

ஒரு செயலை செய்யும்போது, மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது என்றால் அதைத் தெளிவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. ஆனால், ஆட்சியாளர்களும், மாவட்ட நிர்வாகமும் அமைதியாக இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்